பிகார் சட்டசபை தேர்தல் :
PM Modi Accused Rahul Gandhi in Bihar Campaign 2025 : பிகாரில் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவம்பர் 14ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுவாராஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
கர்பூரி தாக்கூருக்கு புகழாரம்
இந்நிலையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசாரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கினார். சமஸ்திபூரில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர், ”பாரத ரத்னா விருது பெற்ற கர்பூரி தாக்கூர் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். எங்களுக்கு உத்வேகம் அளித்தார்.
ராகுல் காந்திக்கு கண்டனம்
அரசியலமைப்பு சட்டத்தின் நகலை கையில் வைத்திருப்பவர்கள் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மோசடிகளில் ஈடுபட்டன. அவர்களின் தலைவர்கள் ஜாமினில் வெளியே வந்தனர். கர்பூரி தாக்கூரின் விருதை திருட முயற்சி செய்தனர். பிகார் மக்கள் காட்டு ராஜ்ஜியத்தை புறம் தள்ளிவிட்டு, நல்லாட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
வளர்ச்சி வேகம் பெறும்
பிகார் மாநிலத்தில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் மாநிலத்தின் வளர்ச்சி வேகம் அடையும். நிதிஷ் குமார் தலைமையில், இந்தக் கூட்டணி இந்த முறை பிகாரில் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும்.
வளர்ச்சியில் சமரசம் கிடையாது
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போது ஒதுக்கப்பட்ட நிதியை விட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பிகாருக்கு மூன்று மடங்கு அதிகமாக நிதி வழங்கியது. வளர்ச்சியில் எப்போதும் பாஜக சமரசம் செய்து கொள்ளாது” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
கர்ப்பூரி தாக்கூர் குடும்பத்துடன் மோடி
முன்னதாக, சமஸ்திபூருக்கு வந்த பிரதமர் மோடி பிகார் முன்னாள் முதல்வரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான கர்ப்பூரி தாக்கூர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருடன் அவர் உரையாடினார். அப்போது பிகார் முதல்வர் நிதிஷ் குமார் உடன் இருந்தார்..
==============