பிரதமர் மோடி காணொளி காட்சி திறப்பு :
PM Modi Launches Bihar Mukhyamantri Mahila Rojgar Yojana 2025 : பிஹாரில் 75 லட்சம் பெண்களுக்கு முதற்கட்டமாக ரூ.10,000 நிதி உதவி வழங்கும் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் மூலம் ரூ. 7,500 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. பிஹார் அரசின், 'முதல்வர் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம்' அம்மாநிலத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இத்திட்டத்தை தொடங்கிவைத்தார். பாட்னாவில் நடைபெற்ற இந்த தொடக்கவிழாவில், முதல்வர் நிதிஷ் குமார், பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பெண்களுக்கு 2 லட்சம் நிதியுதவி :
இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ. 10,000 செலுத்தப்பட்டுள்ளது எனவும் இத்திட்டத்தில் இணைந்துள்ள பெண்களுக்கு அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை தொடர்ந்து நிதி உதவி அளிக்கப்படும் என பிஹார் அரசு தெரிவித்துள்ளது.
பெண்கள் தங்களுக்கு கிடைத்துள்ள இந்த நிதியை, விவசாயம், கால்நடை வளர்ப்பு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, தையல், நெசவு, பிற சிறு தொழில்கள் உட்பட தாங்கள் விரும்பும் தொழிலுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். பெண்களை சுயசார்பு கொண்டவர்களாக மாற்றும் மாநில அரசின் முயற்சியின் ஒரு அங்கமாக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பேச்சு :
இத்திட்டத்தை தொடங்கிவைத்த பிரதமர் மோடி, பயனாளளிகளுடன் கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மோடி, "பிஹாரின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் நலனுக்காக இரட்டை இஞ்ஜின் அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று 'முதல்வர் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தை' தொடங்குவது எனக்கு மிகவும் பெருமை அளிக்கிறது என்று தெரிவித்தார்.
முதல்வர் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம் :
மேலும், பெண்களை லட்சாதிபதிகளாக உயர்த்தும் மத்திய அரசின் பிரச்சாரத்துக்கு இந்த திட்டம் புதிய வலிமையை அளித்துள்ளது. பெண்களை மையமாகக் கொண்டு ஒரு அரசாங்கம் கொள்கைகளை வகுக்கும்போது அது சமூகத்தின் பிற பிரிவுகளுக்கும் பயனளிக்கிறது. உதாரணமாக, மத்திய அரசின் வீடுகட்டும் திட்டம் ஏற்படுத்தி உள்ள ஆழமான மாற்றத்தை முழு உலகமும் தற்போது காண்கிறது என்று கூறினார்.
மேலும் படிக்க : ராணுவ கவச வாகன உற்பத்தி ஆலையை திறந்து வைத்த ராஜ்நாத் சிங்..!
ஒட்டுமொத்த சமூகமும் முன்னேறும் :
ஆரோக்கியமான பெண்கள், வலுவான குடும்பங்கள் பிரச்சாரமும் ஒரு சிறந்த உதாரணம். இந்த பிரச்சார திட்டத்தின் கீழ், கிராமங்கள் மற்றும் நகரங்களில் 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ரத்த சோகை, ரத்த அழுத்தம், நீரழிவு, புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் பரிசோதிக்கப்படுகின்றன. பெண்கள் முன்னேறும்போது ஒட்டுமொத்த சமூகமும் முன்னேறும்" என்று தெரிவித்துள்ளார்.