PM Modi Launches India First Hydrogen Train Jind to Sonipat Haryana  Narendra Modi,x.com
இந்தியா

நாட்டின் முதல் ‘ஹைட்ரஜன் ரயில்’ சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி !

இந்திய ரயில்வேயின் வரலாற்று சாதனை: நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை ஹரியானாவின் ஜிந்த் நகரில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Kavitha prasanna

PM Modi Launches India First Hydrogen Train Jind to Sonipat Haryana

இந்திய ரயில்வே துறையில் மிக முக்கிய மைல்கல்லாக, நாட்டிலேயே முதல்முறையாக ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் முதல் ரயிலின் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ( ஜூலை 17) தொடங்கி வைத்துள்ளார்.

எங்கிருந்து எங்கு வரை இயங்குகிறது?

நாட்டின் இந்த முதல் ஹைட்ரஜன் ரயில் ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் - சோனிபத் ஆகிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது. ஜிந்த் நகரில் இருந்து இந்த ரயில் தனது முதல் சேவையைத் தொடங்கியுள்ளது.

ரயிலுக்கு தேவையான ஹைட்ரஜன் எரிபொருளை சேமித்து, அதை நிரப்புவதற்காக பிரத்யேக ஹைட்ரஜன் சேமிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பு மையம் ஜிந்த் பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த வழித்தடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கிருந்து ரயில் இயக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ‘நெட் ஜீரோ’ இலக்கு

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியன் ரயில்வே, வந்தே பாரத் ரயில்கள் உள்ளிட்ட பல்வேறு புதுமைகளைப் புகுத்தி பயணிகள் அனுபவத்தை மேம்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், இந்த ஹைட்ரஜன் ரயில் பின்வரும் முக்கிய காரணங்களுக்காக மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது:

  • டீசல் ரயில்களுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைந்த செலவைக் கொண்டது.

  • இந்த ரயில் கார்பன் எமிஷன் குறைப்பு, இயங்குவதால் எவ்வித காற்று மாசும் ஏற்படாது.

  • நாட்டின் 'க்ரீன் எனர்ஜி' மற்றும் 'நெட் ஜீரோ கார்பன் எமிஷன்' டார்கெட்டை இந்தியா குறிப்பிட்ட காலத்திற்குள் அடைய இது பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைட்ரஜன் ரயில் எவ்வாறு இயங்குகிறது?

  • ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பம் என்பது உலக அளவில் இன்னுமே தொடக்க நிலையில் உள்ள ஓர் அதிநவீன தொழில்நுட்பமாகும்.

  • இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘ஹைட்ரஜன் எரிபொருள் செல்’ (Hydrogen Fuel Cell) தொழில்நுட்பம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

  • ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றுக்கு இடையே கெமிக்கல் ரியாக்ஷன் ஏற்படும்போது மின்சாரம் உருவாகிறது. இந்த மின்சாரத்தை கொண்டே ரயில் இயக்கப்படுகிறது.

  • இந்த ஒட்டுமொத்த செயல்பாட்டின் போது, ரயில்களில் இருந்து நீராவி மட்டுமே கழிவாக வெளியேறும். இதனால் இது 100% சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.

  • ஹை பிரஷரில் சேமித்து வைக்கப்படும் ஹைட்ரஜன் கேஸ் இந்த ரயிலுக்கு எரிபொருளாகச் செலுத்தப்படுகிறது.

உலக நாடுகளின் பட்டியலில் இணைந்த இந்தியா

தற்போது உலக அளவில் ஜெர்மனி, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே ஹைட்ரஜன் ரயில்களை இயக்கி வரும் நிலையில், இந்த தொடக்கத்தின் மூலம் அந்த பெருமைமிக்க நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் அதிகாரப்பூர்வமாக இணைந்து சாதனை படைத்துள்ளது.

உயர்தர பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வசதிகள்

  • அதிநவீன தொழில்நுட்பம் என்பதால், இந்த ரயிலில் பாதுகாப்பிற்கு உச்சக்கட்ட முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

  • ரயிலில் ஹைட்ரஜன் நிரப்பு பணிகளுக்காகப் பிரத்தியேக ஹைட்ரஜன் கம்பிரஷன் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஹைட்ரஜன் கசிவு கண்டறியும் கருவிகள் மற்றும் தீ விபத்து எச்சரிக்கை சென்சார்கள் போன்ற அதிநவீன பாதுகாப்பு உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன.

  • இந்த ரயிலின் பராமரிப்புப் பணிகளுக்காக டெல்லியின் ஷகுர்பஸ்தி பகுதியில் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  • ஜிந்திலுள்ள ஹைட்ரஜன் நிரப்பு மையம் 24 மணி நேரமும் தடையின்றி கண்காணிக்கப்படும். இதற்கென சிறப்புப் பயிற்சி பெற்ற பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, வழக்கமான பாதுகாப்பு ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

இந்திய ரயில்வே துறைக்குக் கிடைத்துள்ள இந்த மிகப் பெரிய வெற்றி, எதிர்காலத்தில் நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களிலும் ஹைட்ரஜன் ரயில்களை இயக்குவதற்கான விரிவான திட்டங்களுக்கு வலுவான அடித்தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

=====