மின்சார வாகனங்கள் பயன்பாடு :
PM Modi Inaugurates Maruti Suzuki’s First EV e Vitara Car : உலக அளவில் மாற்று எரிபொருளாக மின்சாரத்தை பயன்படுத்தி வாகனங்களை இயக்குவது அதிகரித்து உள்ளது. இதன் மூலம் பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பும் தவிர்க்கப்படுகிறது. இந்தியாவிலும் மின்சார வாகனங்கள் அறிமுகம், விற்பனை, பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் சார்பில் நான்கு சக்கர, இருசக்கர வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
மாருதி சுசுகியின் ’இ விட்டாரா’ :
அந்த வகையில் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருக்கும் மாருதி சுசுகி, முதன்முறையாக மின்சார காரை உருவாக்கி இருக்கிறது.
இ விட்டாரா (e Vitara) என்ற முதல் பேட்டரி அடிப்படையிலான மின்சார எஸ்யூவி வாகனத்தை அந்த நிறுவனம் அறிமுகம் செய்தது.சர்
சர்வதாச சந்தைக்கு பொருந்தும் வாகனம் :
சர்வதேச சந்தைகளுக்கும் பொருந்தக் கூடிய தரத்தில் மாருதி சுசுகி நிறுவனம் இந்த காரை உருவாக்கி இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் இருக்கும் மாருதி வாகன உற்பத்தி ஆலையில் இ விட்டாரா மின்சார கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கே தயார் செய்யப்படக்கூடிய இந்த கார்கள் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் என நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
100 நாடுகளுக்கு ஏற்றுமதி :
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும், இரண்டாவது மாருதி எஸ்யூவி கார் என்ற பெருமை இ விட்டாராவுக்கு கிடைத்துள்ளது. ஏற்கனவே மாருதி நிறுவனம் தங்களுடைய ஃபிரான்க்ஸ் காரை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்தது.
ஆண்டுக்கு 7.50 லட்சம் கார்கள் தயாரிப்பு :
குஜராத் மாநிலத்தில் இருக்கும் மாருதி உற்பத்தி ஆலை ஆண்டுக்கு 7,50,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. தற்போது அதில் மின்சார வாகன உற்பத்தி மையமும் இணைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டிற்குள் மின்சார வாகன உற்பத்தியில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்u இலக்குடன் மாருதி சுசுகி நிறுவனம் முழு வீச்சில் களமிறங்கி இருக்கிறது.
500 கி.மீ. பயணிக்கலாம் :
மாருதி சுசுகி இ விட்டாரா வாகனம் இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் வருகிறது. ஒன்று 49kWh திறன் கொண்டது மற்றொன்று 61kWh திறன் கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் இவை 500 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக சொல்லப்படுகிறது. எனவே, நீண்டதூர பயணங்களுக்கு இந்த கார்கள் உதவியாக இருக்கும்.
நவீன அம்சங்களுடன் மின்சார கார்கள் :
LED ஹெட் லேம்புகள், LED DRLகள், LED டெயில் லேம்புகள், 18-அங்குல ஏரோடைனமிக் அலாய் சக்கரங்கள், 7 ஏர் பேக்குகள் மற்றும் 60 சிறப்பு வசதிகளை கொண்டுள்ளது.இந்தியாவில் இந்த காரின் விலை 18 லட்சம் ரூபாயாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க : ’SUV, e-Vitara’ மாருதியின் முதல் மின்சார கார் : நாளை அறிமுகம்
இந்திய சந்தையில் கடும் போட்டி :
இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஹூண்டாயின் Creta Electric, மகேந்திராவின் BE 6, டாடாவின் Curvv ev மற்றும் MGயின் ZS EV ஆகிய கார்களுக்கு போட்டியாக இ விட்டாரா இருக்கும் என சொல்லப்படுகிறது.
பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் :
100 நாடுகளுக்கு மின்சார கார்களை ஏற்றுமதி செய்யும் திட்டத்தை குஜராத் மாநிலம் ஹன்சல்பூரில் உள்ள மாருதி தொழிற்சாலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த நிகழ்ச்சியில் மாருதி சுசுகி நிறுவன உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.