பொங்கல் விழாவில் பிரதமர் மோடி
Parasakthi Movie Team participates Pongal Celebration 2026 with PM Modi & L Murugan at Delhi : டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வீட்டில் பொங்கல் விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். பொங்கல் பானையில், பாலூற்றி வழிபட்ட பிரதமர், மாடுகளுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, உணவளித்த பிரதமர், கால்நடைகளுக்கு நன்றி தெரிவித்தார்.
தமிழர்களுக்கு என் மீது அன்பு
விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, “ சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் தமிழர்களின் விழா தான் பொங்கல் பண்டிகை. தமிழர்களின் நேசத்தை நான் சம்பாதித்து இருக்கிறேன், அது எனது பாக்கியம்.
வேளாண் குடிமக்கள் அறுவடை திருநாளை கொண்டாடும் பண்டிகையாக பொங்கல் கொண்டாடுகின்றனர்.
பொங்கல் - உலகத் திருவிழா
பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது . பொங்கலும், மகர சங்கராந்தியும் உலக திருவிழாக்களாக மாறிவிட்டன, 1,000 ஆண்டுகளுக்கு முன் கங்கைகொண்ட சோழபுரத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது
விவசாயிகளே நாட்டின் முதுகெலும்பு
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய அரசு தொடர்ந்து உழைத்து வருகிறது. நமது பூமி நலமுடன் இருக்க வேண்டும், அதே நேரத்தில் அறுவடையும் சிறப்பாக இருக்க வேண்டும். அண்மையில் நான் தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மை தொடர்பான மாநாட்டில் பங்கேற்றேன். அங்கு தமிழக இளைஞர்களின் சிறப்பான பணியை பார்த்தேன்.
விவசாயத்தில் தமிழக இளைஞர்கள்
பெரிய பெரிய வேலைகளை துறந்து விட்டு விவசாயத்தை நோக்கி இளைஞர்கள் வருவதை பார்த்தேன் . அவர்களை நான் சந்தித்து உரையாடினேன். வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் தமிழக இளைஞர்கள் சுயசார்பு வேளாண்மை புரட்சியை உருவாக்க வேண்டும் என அவர்களிடம் நான் கோரிக்கை வைத்தேன்.
பூமியை போற்றி காப்பது நம் பொறுப்பு
இயற்கையின் மீதான நமது நன்றியுணர்வு வெறும் வார்த்தைகளுக்கு மட்டும் அல்ல, நமது வாழ்க்கை முறையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறுவதை உறுதி செய்ய பொங்கல் பண்டிகை நம்மை ஊக்குவிக்கிறது.
இந்த பூமி நமக்கு இவ்வளவு கொடுக்கும்போது அதை போற்றுவது நமது பொறுப்பு. மண்ணை ஆரோக்கியமாக வைத்திருப்பது, தண்ணீரை பாதுகாப்பது மற்றும் வளங்களை நியாயமான முறையில் பயன்படுத்துவது, அடுத்த தலைமுறைக்கு மிக முக்கியம்.
விவசாயத்தில் இளைஞர்கள் பங்கு
வரும் காலங்களில் நிலையான விவசாய முறைகள், நீர் மேலாண்மை, இயற்கை விவசாயம், வேளாண் தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டல் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கும். அனைத்து துறைகளிலும் நமது இளைஞர்கள் புதுமையான யோசனைகளுடன் முன்னேறி வருகிறார்கள்.
‘பொங்கல் வாழ்த்துக்கள், வாழ்க தமிழ், வளர்க பாரதம்’ எனக்கூறி பிரதமர் மோடி தனது உரையை நிறைவு செய்தார்.
எல்.முருகன் வீட்டில் பிரதமர் மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர்களான அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், சரத்குமார், குஷ்பூ, விஜயதாரணி உள்ளிட்ட தமிழக நிர்வாகிகளும், ஏராளமான தேசிய பாஜக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
பொங்கல் விழாவில் ‘பராசக்தி’ குழு
இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், நடன இயக்குனரான கலா ஆகியோர் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்ச்சியில் பராசக்தி பட குழுவினரான சிவகார்த்திகேயன், ரவி மோகன் ஆகியோரும் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். ஜனநாயகன் பட விவகாரத்தில், நடிகர் விஜய்க்கு ஆதரவாக ராகுல் காந்தி குரல் கொடுத்த நிலையில், பராசக்தி படக்குழுவினர் பிரதமர் மோடி கலந்து கொண்ட விழாவில் பங்கேற்றது அரசியல் நோக்கர்களால் உற்று நோக்கி பார்க்கப்படுகிறது.
==================