டெல்லி குண்டு வெடிப்பு
PM Narendran Modi on Delhi Car Bomb Blast : டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் வெடித்து சிதறியதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், இது குறித்து என்ஐஏ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மத்திய அரசு பல்வேறு ஆலோசனை கூட்டங்களை மேற்கொண்டு வருகி்றது அதன் ஒரு பகுதியாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டு, ஒவ்வொரு குற்றவாளியையும் வேட்டையாட உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
டெல்லி கார் வெடிப்பு, குண்டு வெடிப்பாக உறுதி
டெல்லி கார் வெடிப்பு தற்போது குண்டு வெடிப்பாக உறுதிய செய்யப்பட்டுள்ளது என டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கார் மெதுவாக இயங்கிய நிலையில் திடீரென பயங்கர வெடிப்பு நடப்பது காட்சியில் தெளிவாகத் தெரிகிறது.
இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து வெடிப்புக்கு டெட்டனேட்டர், அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது உறுதியாகியுள்ளதால் குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஹரியானாவில் பறிமுதல் செய்யப்பட்ட 3,000 கிலோ வெடிபொருட்களுடன் தொடர்பு உள்ளதா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் மருத்துவர் உட்பட 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், இந்த சம்பவத்தில் சம்பந்தபட்டவர்கள் என்று உறுதியானால் அஅவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவர் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி சந்திப்பு
இந்நிலையில், டெல்லி கார் குண்டு வெடிப்பில் காயமடைந்து லோக் நாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் சிக்னல் பகுதியில் திங்கள் கிழமை மாலை 7 மணியளவில் ஹூண்டாய் i20 கார் வெடித்ததில் 13 பேர் உயிரிழந்ததை அடுத்து 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்தில் டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை உஷார்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி எக்ஸ் பதிவு
ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், மத வழிபாட்டுதளங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பூட்டானில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி, டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் சிக்கி காயமடைந்த நபர்களை சந்திப்பதற்காக, லோக் நாயக் மருத்துவமனைக்கு இன்று நேரில் சென்றார்.
அவர் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு ஆறுதல் கூறினார். இதனை அவருடைய எக்ஸ் வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார். சதி திட்டத்திற்கு பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் கொண்டு வரப்படுவார்கள் என்றும் அதில் தெரிவித்து உள்ளார்.
நேரடியாக நலம் விசாரித்த பிரதமர் மோடி
டெல்லி விமான நிலையத்திற்கு வந்திறங்கியதும் நேராக மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற்று வருபவர்கள் ஒவ்வொருவரையும் தனியாக சந்தித்து உள்ளார். அதன் பின்னர், அவர்களுடன் உரையாடியதுடன், விரைவில் குணமடைந்து வரும்படி வாழ்த்தினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர், மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து காயமடைந்தவர்களின் உடல்நிலை குறித்து விரிவான விவரங்களை கேட்டறிந்தார். அவரின் எக்ஸ் பதிவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை அனைவரும் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.