முதல்வர் பதவிக்காக மோதல்
Karnataka CM Leadership Row : அண்டை மாநிலமான கர்நாடகாவில் 2023ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்ற போது, காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வர் பதவிக்காக சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே மோதல் வலுத்த நிலையில், முதல் இரண்டை ஆண்டுகள் சித்தராமையா முதல்வராக தொடர சிவக்குமார் ஒப்புக் கொண்டார்.
சிவக்குமார் ஆதரவாளர்கள் போர்க்கொடி
அதன்படி இந்த மாதத்துடன் சித்தராமையா முதல்வர் பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. எனவே, முன்பே பேசியபடி சிவக்குமாருக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று, அவரது ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
முதல்வர் பதவி - சித்தராமையா பிடிவாதம்
ஆனாலும், மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளும், 'நானே பதவியில் தொடர்வேன்' என சித்தராமையா பிடிவாதமாக உள்ளார். ஒப்பந்தம் போட்டு சமாதானம் செய்த காங்கிரஸ் மேலிடம், இருவரையும் இதுவரை அழைத்து பேசவில்லை. பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்கவும் இல்லை.
கண்டு கொள்ளாத ராகுல்
இரண்டரை ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா விலகுவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. டில்லியில் தன்னை சந்திக்க ராகுலும் அனுமதி கொடுக்காததால், துணை முதல்வர் சிவகுமார் விரக்தியுடன் பெங்களூரு திரும்பி விட்டார்.
கார்கேவுடன் சிவக்குமார் ஆதரவு எம்எல்ஏக்கள்
இதனால் கொதிப்படைந்து போயிருக்கும் சிவக்குமார் ஆதரவு எம்எல்ஏக்கள், டெல்லியில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து, தங்கள் கோரிக்கையை முறையிட்டனர். சிவக்குமாரை முதல்வராக்கா விட்டால், ஒக்கலிக்க சமூக வாக்குகள் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு சென்று விடும் என்று அவர் எச்சரித்தனர்.
சித்தராமையா உறுதி
அதேசமயம், சித்தராமையா ஆதரவு எம்எல்ஏக்களும் அவரை தொடர்ந்து பதவியில் இருக்கச் செய்ய, வரிந்து கட்டி களமிறங்கி வேலை பார்க்கிறார்கள். இந்தநிலையில், செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, ”கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு தானும், சிவக்குமாரும் கட்டுப்பட்டு தான் செயல்பட வேண்டும்.
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன். இப்போது முதல்வராக இருக்கிறேன். தொடர்ந்து அப்படியே நீடிப்பேன்” என்று தெரிவித்தார்.
சிவக்குமார் அதிரடி பேட்டி
காங்கிரசில் நிலவும் மோதல் பற்றி பதிலளித்த டி.கே. சிவக்குமார், 140 எம்எல்ஏக்களின் தலைவராக நான் இருக்கிறேன். கோஷ்டி அரசியல் எனக்கு பிடிக்காது. மேலிடம் என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
====