புதுச்சேரியில் எஸ்ஐஆர் பணிகள்
Pondicherry Draft Voter List 2025 : SIR Electoral Roll Released in Pondicherry : தமிழகம், மேற்குவங்கம், புதுச்சேரி உள்பட நாட்டின் பல மாநிலங்களில் கடந்த மாதம் முதல் எஸ்ஐஆர் எனப்படும், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் அண்மையில் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டது.
வரைவு வாக்காளர் பட்டியல்
இந்நிலையில் புதுச்சேரியில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
85,531 பேர் நீக்கம்
முன்னதாக புதுவையில் 8,51,775 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் தற்போது இதில் 85531 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த வாக்காளர்களில் 10 சதவீதம்
உயிரிழந்தவர்கள், நிரந்தரமாக வேறு பகுதிக்கு குடி பெயர்ந்தவர்கள், இரண்டு பகுதிகளில் வாக்குரிமை வைத்திருந்தவர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இது அம்மாநில மொத்த வாக்காளர் பட்டியலில் 10.04 சதவீதம் ஆகும்.
புதுச்சேரி வாக்காளர்கள் 7.64 லட்சம்
தற்போது புதுச்சேரி மாநிலத்தில் 7.64 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 15க்குள் விண்ணப்பிக்கலாம்
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத வாக்காளர்கள் தங்கள் ஆவணங்களை ஜனவரி 15ம் தேதிக்குள் பதிவு செய்து தங்கள் வாக்குரிமையைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி இருந்தால் மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படுவார்கள் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
======