5 மாநில தேர்தல் திருவிழா
தமிழகம்,கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் திருவிழா நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் நாளை நடைபெறும் 2ம் கட்ட வாக்குப்பதிவோடு இந்த திருவிழா முடிவுக்கு வருகிறது.
இந்தநிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
5 மாநிலங்களில் வாக்குப்பதிவு
ஐந்து மாநிலங்களிலும் தேர்தலை நடத்த கடந்த மாதம் 15ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி அசாம், கேரளா, புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 23ம் தேதியும், அதே நாளில் மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளைநடைபெறவுள்ளது.
மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை
5 மாநில தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்படுகிறது. இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
தமிழகத்தில் அதிக வாக்கு சதவீதம்
234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவியது தமிழக அரசியல் களத்தை மேலும் சூடாக்கியது.
ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற தேர்தல் பரப்புரை தொடங்கி வேட்பாளர் அறிவிப்பு வரை எதிர்பாராத திருப்பங்கள் நடந்தது.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
85.15 சதவீத வாக்குகள் பதிவு
இதனால் தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு 85.15 சதவிகிதம் வாக்கு பதிவானது. அதுமட்டுமல்லாமல் புதுச்சேரி, மேற்கு வங்கம் என அங்கும் கடந்த முறையை விட வாக்கு சதவிகிதம் எதிர்பாராத மாற்றத்தை உண்டாக்கியுள்ளது.
அரசியல் மாற்றத்திற்கான அறிகுறியா?
இது அரசியல் மாற்றத்திற்கான அறிகுறியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் 93.5% வாக்குகள் பதிவானது. குறைந்தப்பட்சமாக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 69 சதவிகித வாக்கு பதிவானது.
தேர்தல் கருத்து கணிப்பு
பொதுவாக தேர்தல் நடக்கும் காலக்கட்டத்தில் வாக்குப்பதிவுக்கு முன்னர் கருத்து கணிப்புகள் வெளியிடப்படும். அது மக்களின் மனதை பிரதிபலிப்பதாக இருக்கும் என சொல்லப்படும்.
ஆனால் அவை தேர்தல் களத்தில் எதிரொலிப்பதில்லை. கடைசி நேரத்தில் கூட வாக்கு செலுத்தும் மக்களின் மனது மாறும். அதேபோல் பெரும்பாலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை ஒத்து போயிருக்கும்.
நாடே எதிர்பார்க்கும் முடிவுகள்
அந்த வகையில் மேற்கு வங்கத்தில் நாளை மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் 5 மாநில தேர்தலின் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகவுள்ளது.
இதன் மூலம் அந்தந்த மாநிலங்களில் யார் ஆட்சிக்கு வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
==================