பிகாரில் அதிக வாக்குப்பதிவு
Prashant Kishor in Bihar Assembly Election 2025 : 2 கட்டங்களாக நடைபெற்ற பிகார் சட்டமன்ற தேர்தல்களில் இதுவரை இல்லாத அளவு வாக்குகள் பதிவாக வியப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. குறிப்பாக பெண்கள் ஆண்களை விட 9 சதவீதம் அளவுக்கு அதிகமாக ஓட்டளித்து இருக்கிறார்கள்.
மீண்டும் என்டிஏ ஆட்சிதான்
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் அதாவது, 9 முடிவுகளும் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் என்று அடித்துக் கூறுகின்றன. அதிகபட்சமாக 100 இடங்கள் வரை வேண்டுமானால் இந்தியா கூட்டணிக்கு கிடைக்கலாம். பாஜக தனிப்பெரும் கட்சியாக வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ்
Exit Poll முடிவுகளில் சில விஷயங்கள் தெளிவாக தெரிகின்றன. குறிப்பாக பிரசாந்த் கிஷோர் கட்சி 10 இடங்களைக் கூட வெல்லாது என்று கூறினாலும், அவரது ஜன் சுராஜ் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தனித்து போட்டியிட்ட PK
பிகார் தேர்தலில் முதல்முறையாக தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் போட்டியிட்டார். ஜன் சுராஜ் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்த அவர் தேர்தலில் தனித்தே களமிறங்கினார். எந்தக் கட்சி உடனும் கூட்டணி அமைக்காமல் அவர் தனித்துப் போட்டியிட்டார். பிரச்சாரத்தின் போதே ஒன்று ஆட்சியைப் பிடிப்போம் அல்லது மிக மோசமான தோல்வியை எதிர்கொள்வோம் என்று சொல்லியே அவர் வாக்கு சேகரித்தார்.
ஜன் சுராஜ்க்கு பலத்த அடி
அதன்படி, தேர்தலிக்கு பிந்தைய சர்வேக்களும் சொல்வது ஒரு செய்தியை தான். NDA கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்கும்.எதிர்க்கட்சி கூட்டணி கௌரவமான தோல்வியை அடையும். ஜன் சுராஜ் கட்சிக்கு மிகப் பெரிய அதிர்ச்சியும் கிடைக்கும் என்பது தான்.
தோல்வியை வெற்றியாக்கும் ஜன் சுராஜ்
அதேசமயம் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவாகும். நிதிஷ்குமார் கட்சி சரிவை சந்திக்கும். ஆர்ஜேடி, காங்கிரஸ் நிலை பரிதாபம். பிரசாந்த் கிஷோர் கட்சி படுதொல்வியை தழுவினாலும், என்டிஏ வெற்றியில் இவரது பங்களிப்பு பெரிதாக இருக்கும் என்றே தெரிகிறது. தேர்தலுக்கு முன்பே ஜன் சுராஜ் வாங்கும் வாக்குகள் தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அது யாருக்கு சாதகம் என்பதை எக்ஸிட் போல் முடிவுகள் வெளிக்காட்டி இருக்கின்றன.
பிரசாந்த் கிஷோர் பெறும் பெரும்பாலான வாக்குகள் "இந்தியா" கூட்டணி வாக்குகள் என்பதால் அது அவர்களை மோசமாகப் பாதித்து இருக்கும்.
என்டிஏ கூட்டணியின் வாக்குகள் பிரசாந்த் கிஷோருக்கு மிகக் குறைவாகவே வருகிறது.எனவே, அவர்களின் வெற்றி பாதிக்காது.
நிதிஷ் குமார் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிந்து, இந்தியா கூட்டணி வாக்குகளை பிரசாந்த் கிஷோர் பறிப்பது, என்டிஏவுக்கு சாதகமாகவே முடியும்.
பிரசாந்த் கிஷோர் கட்சி ஆரம்பித்து ஓராண்டு தான் ஆகிறது. எனவே, பிகார் மக்களை அவரை முழுமையாக ஆதரிக்க வாய்ப்பே இல்லை. எனவே, அவர்கள் என்டிஏவுக்கே வாக்களித்து இருக்கலாம்.
பல தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் என்டிஏ வெற்றி பெற்றால், ஆட்சிக்கு எதிரான வாக்குகளை, அதாவது இந்தியா கூட்டணிக்கான வாக்குகளை ஜன் சுராஜ் பிரித்ததே காரணமாக இருக்கும்.
தோல்வியிலும் வெற்றி, வெற்றியிலும் தோல்வி என்பதை போல, பிகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் ஒரு அழுத்தமான முத்திரை பதிக்கிறார். எதிர்காலத்தில் உள்ளாட்சி தேர்தல்கள், 2030 சட்டமன்ற தேர்தலில் வேண்டுமானால் இது அவருக்கு கை கொடுக்கலாம்.
=====