தலைகீழாக மாறிய தேர்தல் முடிவுகள்
Jan Suraaj Party Prashant Kishor Failed in Bihar Election 2025 : பிகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் பலருக்கு பேரதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. இளம் தலைவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, தேர்தலை நம்பிக்கையுடன் சந்தித்த ஆர்ஜேடி, 25 இடங்களில் வெற்றி என்ற நிலையுடன் பின்னடைவை சந்தித்து இருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க பாஜக - ஆர்ஜேடியை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தியும் அவரது காங்கிரஸ் கட்சியும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கின்றன. பிகாரில் காங்கிரஸ் கரைந்து போய் விட்டது என்பதையே இது காட்டுகிறது.
தேர்தலில் சறுக்கிய ஜன் சுராஜ்
அடுத்ததாக 238 தொகுதிகளில் போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சி. தேர்தல் வியூக வகுப்பாளராக 6 ஆண்டுகளில் 6 முதல்வர்களை உருவாக்கிய பெருமை பிரசாந்த் கிஷோருக்கு உண்டு. அப்படிப்பட்ட அரசியல் சாணக்கியரான பி.கே. ஓராண்டு முன்பு ஜன் சுராஜ் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். இவரது கட்சியில் ஒரு கோடி பேர் உறுப்பினர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.
சவாலில் தோற்ற பிரசாந்த் கிஷோர்
238 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய பிரசாந்த் கிஷோர், சந்தித்த தேர்தல் கூட்டங்களில் மக்கள் அலைமோதினர். இதைப்பார்த்து, என்டிஏவுக்கு தனக்கும் மட்டுமே நேரடி போட்டி என்று சவால் விடுத்தார் பிரசாந்த் கிஷோர்.
உண்மை என்றால் ஜன் சுராஜ் கட்சிக்கு மொத்தமாக 10 லட்சம் வாக்குகள் கூட கிடைக்கவில்லை. நிதிஷ்குமாரின் பெண்கள் ஆதரவு அலையில் பிரசாந்த் கிஷோர் காணாமல் போனார். 238 வேட்பாளர்களில் 233 பேர் டெபாசிட்டை பறிகொடுத்தனர். அதாவது 98% பேர் டெபாசிட் இழந்தனர்.
கணிப்பில் கோட்டை விட்ட பி.கே.
பீகார் தேர்தலின் போது, பிகே தனது சொந்த எதிர்காலத்தை கணித்தது மட்டுமல்லாமல், ஜேடியுவின் முடிவையும் அறிவித்தார். 'ஜான் சூரஜ் 130 இடங்களுக்கும் குறைவாக வென்றால், நான் என் தோல்வியை ஏற்றுக்கொள்வேன். ஜேடியு 25 இடங்களுக்கு மேல் வென்றால், நான் அரசியலை விட்டு விலகுவேன்' என்று சவால் விடுத்து இருந்தார். ஆனால், மக்களின் தீர்ப்பு வேறு மாதிரியாக இருக்கிறது.
அரசியலில் நீடிப்பாரா? பி.கே.
அப்படி என்றால், இனி பி.கே. அரசியலில் நீடிப்பாரா? அல்லது விலகுவாரா என்பது கேள்வியாக நிற்கிறது. அடுத்த 5 ஆண்டுகள் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்து, மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்தால் மட்டுமே அவரால், 2030 தேர்தலில் எழுச்சி பெற முடியும்.
நிதிஷ்குமார், சிராக் பஸ்வான், தேஜஸ்வியின் அரசியல் எதிர்காலத்தை பொருத்தே, ஜன் சுராஜின் எதிர்காலம் அமையும்.
=====