பிகார் சட்டமன்ற தேர்தல்
PM Modi on RJD Congress : பிகார் மாநிலத்தில் முதற்கட்டமாக 121 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 2ம் கட்டமாக வரும் 11ம் தேதி 122 தொகுதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தநிலையில், ஹராரியா என்ற இடத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
வளர்ச்சி பாதையில் பிகார்
”பிகார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்ற பிறகுதான் மாநிலம் வளர்ச்சியை நோக்கி சென்றது. பாஜக தலைமையிலான மத்திய அரசு பீஹார் மாநில விவசாயிகளுக்கு அதிக நிதி வழங்கி உள்ளது. ஆர்ஜேடி ஆட்சியில் வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை. நிதிஷ் குமார் ஆட்சி காலத்தில் தான் வளர்ச்சிப் பணிகள் வேகம் எடுத்தன.
காட்டாட்சிக்கு முடிவு கட்டினோம்
1990 - 2005ம் ஆண்டு வரை ரவுடிகள் ராஜ்ஜியம், பழி தீர்த்தல், ஊழல் என பிகார் அவலங்களை முழுமையாக ஒழித்துள்ளோம். 15 ஆண்டுகளாக இந்த காட்டாட்சி ராஜ்ஜியம் பிகாரை பேரழிவுக்கு உட்படுத்தியது. உங்கள் தாத்தா, பாட்டியின் ஒரு ஓட்டு பீஹாரை சமூக நீதியின் பூமியாக மாற்றியது.
ஊடுருவல்காரர்களை திருப்பி அனுப்புவோம்
ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் இடையேயான மோதல் தற்போது பீஹாரில் உள்ள துணை முதல்வர் வேட்பாளர் 'காட்டாட்சி ராஜ்ஜியத்திற்கு' எதிராகப் பேசும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஊடுருவல்காரர்களைக் கண்டுபிடித்து, அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே திருப்பி அனுப்புவோம்;
ஊடுருவலை ஆதரிக்கும் ஆர்ஜேடி, காங்கிரஸ்
ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகள் ஊடுருவல்காரர்களை பின்வாசல் வழியாக இந்திய குடிமக்களாக மாற்ற முயற்சி செய்கின்றன. ஆனால், அது நடக்காது. இன்று முதல் கட்ட தேர்தலில் மாநிலத்தின் வளர்ச்சிக்காக மக்கள் வாக்களிக்கின்றனர்.
இளைஞர்கள் உற்சாகம், வெற்றி உறுதி
பிகார் மக்கள் காலையிலிருந்தே ஓட்டுச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து, தங்கள் வாக்கினை செலுத்தி வருகிறார்கள். இளைஞர்களிடையே முன்னெப்போதும் இல்லாத உற்சாகம் நிலவுகிறது. அனைத்து வாக்காளர்களையும் நான் வாழ்த்துகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை உற்சாகம் உறுதி செய்கிறது” இவ்வாறு பிரதமர் மோடி உரைநிகழ்த்தினார்.
==============