ஆறுவழிச்சாலை திறப்பு
உத்தரப்பிரதேசத்தில் ரூ.36,230 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 594 கிலோ மீட்டர் தொலைவிலான கங்கா ஆறுவழி விரைவுச்சாலை திட்டத்தை அம்மாநிலத்தின் ஹர்தோய் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்பணித்தார்.
மேற்கு வங்கத்தில் அமோக வாக்குப்பதிவு
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “மேற்கு வங்கத்தில் தற்போது இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
முதல் கட்டத்தைப் போலவே இரண்டாம் கட்டத்திலும் மக்கள் பெருமளவில் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகிறார்கள்.
அச்சமின்றி வாக்களிப்பு
60, 70 வருடங்களாக நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வகையில் அச்சமற்ற ஒரு சூழலில் வங்கத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. எவ்வித அச்சமும் இன்றி மக்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
குஜராத்தில் அமோக வெற்றி
குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பாஜக சிறப்பான வெற்றியை ஈட்டி இருக்கிறது. இதில், 80 முதல் 85% வரையிலான நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.15 மாநகராட்சிகளையும் பாஜக கைப்பற்றி இருக்கிறது.
5 மாநில தேர்தலில் அமோக வெற்றி!
ஐந்து மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் பாஜக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்யப் போகிறது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
மே 4-ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நமது உறுதியை மேலும் வலுப்படுத்தும்.
வளர்ச்சிக்கு எதிரான சமாஜ்வாதி
அதிகாரத்தை இழந்த சமாஜ்வாதி கட்சி, உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடையவில்லை. அவர்கள் உத்தரப் பிரதேசத்தை மீண்டும் பழைய இருண்ட காலத்துக்கே இழுத்துச் செல்ல விரும்புகிறார்கள்.
சமாஜ்வாதி கட்சி பெண்களுக்கு எதிரானது. சமீபத்தில் சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் உண்மையான முகத்தை நாடு மீண்டும் ஒருமுறை கண்டது.
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா
மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது.
அந்த மசோதா நிறைவேறி இருந்தால் 2029 ம் ஆண்டு தேர்தலில் இருந்தே மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் நமது தாய்மார்கள் மற்றம் சகோதரிகளுக்கு 33% இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும்.
வரவிடாமல் தடுத்த திமுக, சமாஜ்வாதி
உத்தரப் பிரதேசத்தை இழிவாகப் பேசி அரசியல் செய்யும் திமுக போன்ற கட்சிகள், உத்தரப்பிரதேசத்துக்கான இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்போவதாகக் கூறி எதிர்த்தன.
நாடாளுமன்றத்தில் அந்த கட்சிகளின் மனநிலையே சமாஜ்வாதி கட்சியின் குரலாகவும் ஒலித்தது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
==========