பிரான்சில் மோடி
அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
‘பாரதத்தின் புதுமை கண்டுபிடிப்புகள்’
நீஸ் நகரில் ‘பாரதத்தின் புதுமை கண்டுபிடிப்புகள்’ மாநாடு தொடங்கியது. இதையொட்டி அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் பார்வையிட்டனர்.
இந்திய நிறுவனங்களின் அரங்குகள்
இந்தியாவைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மாநாட்டில் அரங்குகளை அமைத்துள்ளன. உலகம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பிரான்சுடன் நெருங்கிய நல்லுறவு
மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், “இந்தியா - பிரான்ஸ் இடையே நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. இரு நாடுகளும் ஒன்றிணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
உலக நாடுகள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு இணைந்து தீர்வு காண்கின்றன. சூரிய சக்தி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறைகளில் இணைந்து பணியாற்றி வருகின்றன.
‘இந்தியா - பிரான்ஸ் புதுமை கண்டுபிடிப்பு’ ஆண்டு
‘இந்தியா - பிரான்ஸ் புதுமை கண்டுபிடிப்பு’ ஆண்டாக இந்த ஆண்டை அறிவித்துள்ளோம். இதன் ஒரு பகுதியாகவே ‘பாரதத்தின் புதுமை கண்டுபிடிப்புகள்’ மாநாடு நடைபெறுகிறது. இதன்மூலம் இந்தியா, ஐரோப்பிய நாடுகளின் தொழில்நுட்ப நிபுணர்கள் இடையே நேரடி தொடர்பு ஏற்படும்.
இந்தியாவில் ஸ்டார்ட்அப் புரட்சி
இந்தியாவில் ஸ்டார்ட்அப் புரட்சி நடந்து வருகிறது. இந்தியாவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஸ்டார்ட்அப் நிறுவனங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் பெரிய மாற்றங்கள்
ஏஐ தொழில்நுட்பம் மூலம் கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஹைட்ரஜன் எரிசக்தி, மின்சார வாகனங்கள், புதிய பேட்டரி தொழில்நுட்பங்கள் என இந்தியாவில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
அனைவருக்கும் ஏஐ தொழில்நுட்பம்
உலக நாடுகளின் தேவைகளை கருத்தில் கொண்டு மனித குலத்துக்கு சேவையாற்ற இந்திய நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து வருகின்றன. ஏஐ தொழில்நுட்பம் உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்தியாவின் லட்சியம்.
புதுமைகளை கண்டுபிடிக்கும் இந்தியர்கள்
புதுமைகளைக் கண்டுபிடிப்பது இந்தியர்களின் மரபணுவோடு கலந்திருக்கிறது. ஒரு காலத்தில் உலகத்தின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நாடாக இந்தியா இருந்தது.
இப்போது உலகத்துக்கு தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
======