Prime Minister Modi called for an all-party meeting tomorrow to discuss the challenges facing India due to Iran war google
இந்தியா

West Asia Crisis : எரிபொருள் தட்டுப்பாடு, இந்தியர்கள் பாதுகாப்பு : டெல்லியில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

ஈரான் போரால் இந்தியா எதிர்கொண்டு வரும் சவால்கள் பற்றி விவாதிக்க நாளை அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Kannan

25வது நாளில் ஈரான் சண்டை

Government calls all-party meeting on West Asia crisis on March 25 : ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல் 25வது நாளை எட்டி இருக்கிறது.

இருநாடுகளுக்கும் தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக, ஈரானும் ட்ரோன், ஏவுகணைகள் மூலம் பதிலடி கொடுத்து வருகிறது.

கச்சா எண்ணெய் சப்ளை பாதிப்பு

ஹோர்மூஸ் நீரிணையை பயன்படுத்த தடை விதித்துள்ள ஈரான், உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு வழி வகுத்து இருக்கிறது.

இந்திய எண்ணெய் கப்பல்கள் செல்ல மட்டும் அனுமதி தந்தாலும், எதிர்பார்த்த அளவு கச்சா எண்ணெய், திரவ எரிவாயு வந்து சேரவில்லை.

5 நாட்கள் போரை நிறுத்துவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தாலும், அதை ஈரான் பொருட்படுத்தவே இல்லை.

இந்தியாவிலும் தட்டுப்பாடு

ஈரான் சண்டையால், இந்தியாவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதிய அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தாலும். போர் மேலும் பல மாதங்கள் நீடித்தால், நிலைமை என்னவாகும் என்ற கவலை எழுந்துள்ளது.

கத்தாரில் இருந்து திரவ எரிவாயுவை கொண்டு வருவதில் சிக்கல் இருப்பதால், இந்தியாவில் வணிக சிலிண்டர்கள் சப்ளை பெருமளவில் தடைபட்டுள்ளது.

வீடுகளுக்கான எரிவாயு சிலிண்டர்களும், புக் செய்த பல நாட்களுக்கு பிறகே கிடைக்கின்றன.

பிரதமர் மோடி விளக்கம்

ஈரான் போரால் இந்தியா எதிர்கொண்டு வரும் பிரச்னைகள் குறித்து, மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று விளக்கம் அளித்தார்.

போதிய அளவு எரிபொருள் கையிருப்பில் இருப்பதாகவும், மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், எரிபொருள்கள் விலை உயர்த்தப்படாது என்றும் தெரிவித்தார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம்

இந்தநிலையில், மத்திய கிழக்குப் போர் குறித்து விவாதிக்க நாளை (மார்ச் 25) மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

போரினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோகப் பாதிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து கட்சி பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

====