Prime Minister Modi called for unanimous passage of Women's Reservation Bill and empowerment of women google
இந்தியா

”மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்” : பெண்கள் சக்தியை வலுப்படுத்துவோம் : பிரதமர் மோடி அழைப்பு

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி பெண்கள் சக்தியை வலுப்படுத்துவோம் என்று, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Kannan

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிர் பங்களிப்பை அதிகரிக்க செய்யும் வகையில், இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படுகிறது. இதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் வரும் 16ம் தேதி நடைபெறுகிறது.

புத்தாண்டு கொண்டாட்டங்கள்

இந்தச்சூழலில் பிரதமர் நரேந்திர மோடி வேளியிட்டுள்ள அறிக்கையில், “ வரும் நாட்களில், இந்தியா முழுவதும் பண்டிகைக் காலம் களைகட்டும்.

கேரளம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாடப்படும். இது நம்பிக்கையையும் ஆக்கப்பூர்வ சிந்தனையையும் கொண்டு வரும்.

வரலாற்று சிறப்பு மிக்க தருணம்

விழாக்களை கொண்டாடும் மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், இந்த நேரத்தில், நமது நாடு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தின் வாயிலில் நிற்கிறது.

இது நமது ஜனநாயகத்தின் அடித்தளங்களை ஆழப்படுத்துவதற்கும், சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் நமது கூட்டு உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிசெய்வதற்குமான ஒரு வாய்ப்பாகும்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்

மகளிர் இட ஒதுக்கீட்டை மேம்படுத்தும் ஒரு முக்கிய மசோதாவை விவாதித்து நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் ஏப்ரல் 16 அன்று கூட்டப்படவுள்ளது.

பெண்களின் நீண்டகால விருப்பம்

இதனை வெறுமனே சட்டமியற்றும் ஒரு செயல்பாடு என்று கூறுவது குறைத்து மதிப்பிடுவதாகவே இருக்கும். இது இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பெண்களின் விருப்பங்களின் பிரதிபலிப்பாகும். இந்திய மக்கள் தொகையில் ஏறக்குறைய பாதி பேர் பெண்களாவர்.

பெண்களுக்கு உரிய பங்கு இல்லை

இருப்பினும், அரசியலிலும் சட்டமியற்றும் அமைப்புகளிலும் அவர்களின் பிரதிநிதித்துவம், சமூகத்தில் அவர்களின் பங்கிற்கு ஏற்ற அளவு எப்போதும் இருந்ததில்லை. இது துரதிர்ஷ்டவசமானது.

2029 மக்களவைத் தேர்தல்களும், வரவிருக்கும் பல்வேறு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களும் மகளிர் இட ஒதுக்கீட்டை உள்ளடக்கி நடத்தப்படுவது கட்டாயமாகும்.

இந்தத் தருணம் கூட்டு நடவடிக்கையைக் கோருகிறது. இது ஏதேனும் ஓர் அரசு, கட்சி அல்லது தனிநபரைப் பற்றியது அல்ல.

அனைவரின் ஒத்துழைப்பு அவசியம்

நாடு முழுவதுமே இந்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதை நனவாக்க ஒன்றிணைவதைப் பற்றியது. இது நமது மகளிர் சக்திக்கு நாம் செலுத்த வேண்டிய கடமையாகும்.

அதனால்தான், மகளிர் இட ஒதுக்கீட்டிற்கான ஒரு மசோதா நிறைவேற்றப்படும்போது, ​​அது பரந்த அளவிலான ஒருமித்த கருத்தைப் பிரதிபலிக்க வேண்டும்.

நாட்டின் நலன் முக்கியம்

தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டு வழிநடத்தப்பட வேண்டும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நாம் அணுகும் வேண்டும்.

கட்சி வேறுபாடின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, இந்தியப் பெண்களுக்கான இந்த முக்கிய முன்னெடுப்பிற்கு ஆதரவளிக்க வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

பொறுப்போடு செயல்படுவோம்

இந்த வாய்ப்பை நாம் பொறுப்புணர்ச்சியுடனும் குறிக்கோளுடனும் பயன்படுத்திக்கொள்வோம்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில், வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையாகச் செயல்பட முடியும் என்பதை இந்தியா எப்போதுமே நிரூபித்துள்ளது.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கிச் சென்று, அரசியல் சட்ட விழுமியங்களை வலுப்படுத்தி, தேச முன்னேற்றத்திற்காக நமது மகளிர் சக்தியை வலுபடுத்துவோம்” என்று அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

======