Prime Minister Narendra Modi Criticized Congress Party in Parliament Session 2025 ANI
இந்தியா

பாகிஸ்தானின் செய்தித் தொடர்பாளர் காங்கிரஸ் : பிரதமர் மோடி சாடல்

PM Modi Criticized Congress in Parliament : பாகிஸ்தானின் செய்தித் தொடர்பாளர் போல காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி விமர்சித்து இருக்கிறார்.

Kannan

இந்தியா ஒருபோதும் அடிபணியாது :

PM Modi Criticized Congress in Parliament : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விவாதத்திற்கு பதிலளித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி “ மே 9ம் தேதி அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், என்னை தொடர்பு கொள்ள ஒரு மணி நேரம் முயற்சி செய்தார். பின்னர் நான் அவரோடு பேசினேன். அப்போது அவர், ‘பாகிஸ்தான் மிகப்பெரிய தாக்குதலை நடத்தப் போகிறது’ என்றார். அவரிடம் தெளிவாக கூறினேன். ‘பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், அதற்கான பெரும் விலையை கொடுக்க நேரிடும். அவர்கள் துப்பாக்கியால் சுட்டால், நாங்கள் சக்திவாய்ந்த குண்டுகளை வீசுவோம்’ என்று தெளிவுபடுத்தினேன்.

எந்த எல்லைக்கும் இந்தியா செல்லும் :

இந்தியா முன்பைவிட மிகவும் வலுவாக இருக்கிறது என்பதும், எதிர்காலத்தில் மீண்டும் பிரச்சினை எழுந்தால், இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும் என்பதும் பாகிஸ்தானுக்கு தெளிவாகப் புரிந்திருக்கும். இந்திய நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோயில். ஆபரேஷன் சிந்தூர்(Operation Sindoor) தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் அத்துமீறினால் ஆபரேஷன் சிந்தூர் மீண்டும் தொடங்கப்பட்டு, பதிலடி கொடுக்கப்படும்.

பாகிஸ்தானை ஆதரிக்கும் காங்கிரஸ் :

சுயசார்புக் கொள்கையின் அடிப்படையில் இந்தியா அதிவேகமாக முன்னேறி வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானை சார்ந்து செயல்பட்டு வருகிறது. அது தொடர்ச்சியாக வதந்திகளைப் பரப்புகிறது. காங்கிரஸும், அதன் தலைவர்களும் பாகிஸ்தானின் செய்தி தொடர்பாளர்களை போல பேசுகின்றனர். இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தினால், காங்கிரஸ் கட்சி அதற்கு ஆதாரம் கேட்கிறது.

ஆபரேஷன் சிந்தூரின்போது பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார். அப்போதும் சிலர் எதிர்மறையாக கருத்துகளைப் பதிவிட்டனர். ஆனால் அந்த வீரர் பத்திரமாக நாடு திரும்பினார்.

பாகிஸ்தானுக்காக சிலர் அழுகின்றனர் :

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலால் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் அழுது கொண்டிருக்கின்றனர். அவர்களோடு சேர்ந்து இந்தியாவில் சிலரும் அழுகின்றனர். இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய முடியவில்லையே என்று அவர்கள் மிகவும் வருந்துகின்றனர். தற்போது அவர்களுக்கு திடீரென வீரம் வந்துவிட்டது. ஆபரேஷன் சிந்தூரை ஏன் நிறுத்தினீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர். ஒட்டுமொத்த நாடும் உங்களைப் பார்த்து சிரிக்கிறது.

தாரைவார்த்த காங்கிரஸ் :

சீனாவுடனான போரின்போது 38,000 சதுர கி.மீ. நிலத்தை இந்தியா இழந்தது. 1965ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் காஷ்மீரின் ஹாஜி பிர் பாஸ் பகுதியை இந்திய ராணுவம் கைப்பற்றியது. ஆனால் அப்போதைய ஆட்சியாளர்கள் அந்த பகுதியை மீண்டும் பாகிஸ்தானுக்கே தாரைவார்த்தனர்.

தமிழக மீனவர்களுக்கு துரோகம் :

1971ம் ஆண்டு போரின்போது 93,000 பாகிஸ்தான் வீரர்களை இந்திய ராணுவம் சிறைபிடித்தது. இதை பயன்படுத்தி ஏராளமான விஷயங்களை சாதித்து இருக்க முடியும். ஆனால் அன்றைய ஆட்சியாளர்கள் அருமையான வாய்ப்பை தவறவிட்டனர். 1974ம் ஆண்டு கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. இதன் மூலம் தமிழக மீனவர்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டது.

பாகிஸ்தானுக்கு அடிபணிந்த ஆட்சியாளர்கள் :

மும்பை தாக்குதலின்போதும் அன்றைய ஆட்சியாளர்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. பாகிஸ்தான் தூதரகத்தில் ஓர் அதிகாரிகூட வெளியேற்றப்படவில்லை. சில வாரங்களிலேயே பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. அந்த நாட்டுக்கு மிகவும் விரும்பப்படும் நாடு அந்தஸ்தும் வழங்கப்பட்டது.

சிந்தி நதி பகிர்விலும் அநியாயம் :

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் நேருவே கையெழுத்திட்டார். இந்த பிரச்சினையில் உலக வங்கி தலையிடவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி சிந்து நதியின் மொத்த நீரில் 80 சதவீதம் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. 20 சதவீதம் மட்டுமே இந்தியாவுக்கு கிடைத்தது.

தவறுகளில் வரலாறு படைத்த காங்கிரஸ் :

இதன் காரணமாக காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். நேருவின் மிகப்பெரிய தவறுகளில் சிந்து நதி ஒப்பந்தமும் ஒன்று எல்லாவற்றையும் தாரை வார்த்து, தோல்வி அடைந்த காங்கிரஸ், இப்போது ராஜதந்திரம் குறித்து நமக்கு பாடம் நடத்துகிறது” இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி ஆவேசத்துடன் பேசினார்.

====