மகளிர் இட ஒதுக்கீடு
மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டப்பிரிவு, 2023ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் கொண்டு வரப்பட்டது.
ஆனால், 2027ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மேற்கொள்ளப்படும் தொகுதி மறுவரையறை பணிகள் முடிந்த பின்னரே இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும்.
2029ல் மகளிர் இட ஒதுக்கீடு
அப்படி பார்த்தால் 2034ம் ஆண்டுக்கு முன்பாக இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது. எனவே, 2029ம் ஆண்டு மக்களவை தேர்தலிலேயே பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை கொண்டு வரும் வகையில் நாரி சக்தி வந்தன் அதினியம் (பெண்கள் சக்தியை வணங்குதல்) சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்
இதற்காக வரும் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவை கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பெண்களின் முன்னேற்றம் அவசியம்
”எந்தவொரு சமூகமும் முன்னேற வேண்டுமெனில், அச்சமூகத்தை சேர்ந்த பெண்கள் முன்னேறுவதற்கும், முடிவுகளை எடுப்பதற்கும், தலைமை தாங்குவதற்கும் உரிய வாய்ப்புகள் கிடைப்பது இன்றியமையாதது.
இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்கும் தனது தொலைநோக்குக் கனவை நனவாக்குவதற்கு, இம்முன்னேற்றப் பயணத்தில் பெண்கள் இன்னும் பரந்த அளவிலும், மிகவும் தீவிரமாகவும் பங்காற்றுவது மிகவும் அவசியம்.
மக்களவை தேர்தலில் 33% இட ஒதுக்கீடு
எனவே, நாரி சக்தி வந்தன் அதினியம் சட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம்.
2029ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களும், சட்டப்பேரவைத் தேர்தல்களும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுடன் நடத்தப்படுவது அவசியம்.
அனைவரும் ஒன்று சேர்ந்து நிறைவேற்றுவோம்
இந்த சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக நாம் அனைவரும் ஒரே குரலில் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
இந்தச் சிறப்புக் கூட்டத்தொடர், நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான பொன்னான வாய்ப்பு.
140 கோடி இந்தியர்களின் சாதனை
இது நாட்டின் பெண்கள் சக்திக்கும், 140 கோடி இந்தியர்களுக்கும் மாபெரும் சாதனையாக அமையும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நாடாளுமன்றத்தில் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்துவோம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
எம்பிக்களுக்கு அருமையான வாய்ப்பு
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதில் பங்காற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த வரலாற்று முயற்சியின் ஒரு பகுதியாக இருந்ததற்காக எப்போதும் பெருமை கொள்வார்கள்.
எனவே, இந்த வாய்ப்பை நாம் நழுவவிடக் கூடாது” என்று அந்தக் கடிதத்தில் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
33% இட ஒதுக்கீடு
மகளிர் இட ஒதுக்கீடு சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டால், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 816 ஆக உயரும்.
அதில் 273 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். இதேபோன்று, சட்டசபைகளிலும் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும்.
====