ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி :
இருநாடுகளின் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை ஜப்பான் புறப்பட்டுச் செல்கிறார். நாளை தலைநகர் டோக்கியோவை சென்றடையும் அவர், 2 நாட்கள் அங்கு தங்கி இருப்பார். 15வது இந்தியா – ஜப்பான் வருடாந்திர மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
அமெரிக்க விவகாரம் பற்றி ஆலோசனை :
இந்த சந்திப்புன்போது பிரதமர் மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகியோர் பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம், குறித்து ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்தும் அவர்கள் விவாதிக்கின்றனர்.
சீனா செல்லும் பிரதமர் மோடி :
ஜப்பான் பயணத்தை நிறைவு செய்து 30ம் தேதி சீனா செல்லும் பிரதமர் மோடி, தியான்ஜின் நகரில் 31ம் தேதி நடக்க உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க உள்ளார். 7 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அவர் நடத்த இருக்கும் பேச்சுவார்த்தை உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கைகோர்க்கும் இந்தியா - சீனா :
அமெரிக்காவின் தொடர் மிரட்டல்கள், கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை பற்றி இரு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர். இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவது பற்றியும் முக்கிய முடிவுகளை அவர்கள் எடுப்பார்கள் எனத் தெரிகிறது.
மோடி - ஜின்பிங் - புதின் சந்திப்பு :
2 நாட்கள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஒரு பகுதியாக இந்தியா, சீனா, ரஷ்யா தலைவர்கள் சந்தித்து பேச இருக்கிறார்கள். இது அமெரிக்காவிற்கு செக் வைக்கும் கூட்டம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மோடி, ஜின்பிங், புதின் கூட்டணி அமைத்தால், அது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்.
இந்தியாவுக்கு வலுவான வாய்ப்புகள் :
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு, பல்வேறு முக்கிய திருப்பங்களை ஏற்படுத்த இருக்கிறது. இந்திய பொருட்களுக்கு டிரம்ப் 50 சதவீத வரி விகித்தாலும், பிற நாடுகளுக்கான ஏற்றுமதியை அதிகரித்து இழப்பை சரிக்கட்ட இந்தியா முனைப்பு காட்டி வருகிறது. இந்தச் சூழலில் மூன்று பேரும் நடத்த இருக்கும் பேச்சுவார்த்தை இந்தியாவை மேலும் வலிமையாக்கும் என்பதில் ஐயமில்லை.
=========