Prime Minister Modi proudly said that, Women's Reservation Bill one of the most important decisions in 21st century ani twitter
இந்தியா

”மகளிர் 33% இடஒதுக்கீடு, பெண்களின் கனவுகளுக்கு புதிய சிறகு” : 21ம் நூற்றாண்டின் முக்கிய முடிவு : பிரதமர் மோடி பெருமிதம்

21ம் நூற்றாண்டில் கொண்டு வரப்பட்ட மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா, என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Kannan

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா

மக்களவை, சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீட்டை 2029ம் ஆண்டு அமல்படுத்தும் வகையில், சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, வரும் 16ம் தேதி மூன்று நாட்களுக்கு நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்

இந்தக் கூட்டத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும். இதற்காக கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

புதிய அத்தியாயம் தொடக்கம்

இந்தநிலையில், டெல்லியில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். “21ம் நூற்றாண்டின் முக்கிய முடிவுகளில் ஒன்று மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா. இந்த நடவடிக்கை மூலம் ஒரு புதிய அத்தியாயம் தொடங்க உள்ளது.

பெண்களுக்கு அர்ப்பணிப்பு

இந்த நூற்றாண்டிற்கான மிகச்சிறந்த தருணம் என்றால் அது பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தது தான். இந்த முடிவு நாட்டின் அசைக்க முடியாத சக்தியான பெண்கள் சக்திக்கு அர்ப்பணிக்கப்படுகின்றது.

பெண்களுக்கு அதிகாரம்

பெண்களுக்கான முக்கியத்துவம் மற்றும் அதிகாரம் அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. நாம் வரலாற்றை எழுதும் காலகட்டத்தில் இருக்கிறோம்.

நாம் எடுத்துள்ள இந்த முயற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றி முடிக்க கோடிக்கணக்கான பெண்களின் ஆசீர்வாதம் எனக்கு தேவைப்படுகிறது.

செயல்பாட்டிற்கு வரும் கனவு

வரலாற்று சிறப்புமிக்க விஷயத்தை படைக்கும் இறுதிக்கட்டத்தில் இந்திய நாடாளுமன்றம் இறங்கி இருக்கிறது. நீதி வழங்குவது என்பது வெறும் வார்த்தை முழக்கம் மட்டுமல்ல அது செயல்பாட்டில் கொண்டு வருவது.

இந்தியாவின் பணி சூழல்களிலும் சமூக நீதி என்பது செயல்படுத்தப்பட வேண்டும். இந்த மசோதா ஒட்டு மொத்த நாட்டின் வடிவமைப்பையும் மாற்றப் போகிறது.

ஒருமித்த குரலில் இந்தியா

இந்த மசோதாவை கொண்டு வர ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரே குரலில் இணைந்து நிற்கிறது. எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பும் இந்த விவகாரத்தில் தேவைப்படுகிறது.

அதனால் தான் அவர்களுக்கு நானே தனிப்பட்ட முறையில் கடிதங்களை எழுதி இருக்கிறேன்.

40 ஆண்டு கனவு நிறைவேறுகிறது

40 ஆண்டு கால இந்தியர்களின் கனவு நிறைவேற உள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு தருணத்தில் இந்த மசோதாவுக்காக உழைத்திருக்கிறார்கள், நான் அவர்களை குறைத்து மதிப்பிடவில்லை.

பெண்களுக்கான கனவுகளுக்கு புதிய சிறகுகள் கொடுப்பதுதான் இந்த மசோதாவின் முக்கிய அம்சம். இந்திய முன்னேற்றத்திற்கு பெண்களின் சக்தி என்பது அளவிடவே முடியாதது.

குடியரசுத் தலைவர், நிதி அமைச்சர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளை மகளிர் திறம்பட கையாள்கின்றனர்.

உள்ளாட்சி அமைப்புகளில் 14 லட்சம் பெண்கள்

14 லட்சம் மகளிர் உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்புகளை நிர்வகிக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்தடுத்து உயர் இடங்களில் சரியான அளவு பொறுப்புகளை பகிர்ந்து அளிப்பதே உண்மையான ஜனநாயகம்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

==================