பாஜக அபார வெற்றி
PM Modi on NDA Alliance Wins Bihar Election 2025 : 243 தொகுதிகளை கொண்ட பிகார் சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளை கைப்பற்றி, மாபெரும் வெற்றியை ஈட்டி இருக்கிறது. தனிப்பெரும் கட்சியாக 89 தொகுதிகளை பாஜக கைப்பற்றி இருக்கிறது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களை வென்று இருக்கிறது. லோக் ஜன்சக்தி கட்சி 19 இடங்களில் வெற்றியை ஈட்டியுள்ளது. மகாபத்பந்தன் கூட்டணியை பொருத்தவரை ஆர்ஜேடி 25 தொகுதிகளை மட்டுமே வென்றிருக்கிறது. காங்கிரஸ் 6 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது.
பிகார் சட்டமன்ற தேர்தல் - இறுதி முடிவுகள் :
பாரதிய ஜனதா கட்சி - 89
ஐக்கிய ஜனதா தளம் - 85
ராஷ்ட்ரீய ஜனதா தளம் - 25
லோக் ஜன்சக்தி - 19
காங்கிரஸ் - 6
ஏஐஎம்ஐஎம் ( AIMIM ) - 5
இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா - 5
ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா - 4
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2
இந்திய கம்யூனிஸ்ட் - 1
Indian Inclusive Party - 1
பகுஜன் சமாஜ் கட்சி - 1
பாஜகவினர் உற்சாகம்
பிகார் தேர்தலில் கிடைத்து இருக்கும் வரலாற்று வெற்றி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய வலிமையை கொடுத்து இருக்கிறது. வெற்றியை தொடர்ந்து டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிகார் மக்களுக்கு நன்றி, நன்றி
அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்களிடையே உரையாற்றிய அவர், ”மாபெரும் வரலாற்று தீர்ப்பை தந்து, அனைத்து தேர்தல் சாதனைகளையும் பீஹார் மக்கள் முறியடித்துள்ளனர். இனி, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் காட்டாட்சி, பிகாரில் ஒருபோதும் வராது. மக்களின் ஆதரவு, மாநிலத்தில் பெரிய புயலை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் மக்களின் சேவகர்கள். எங்களின் கடின உழைப்பு மூலம் மக்களின் மனங்களை கொள்ளையடித்து இருக்கிறோம். .
SIR மூலம் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டது
ஜனநாயகத்துக்கு பிழையற்ற வாக்காளர் பட்டியல் அவசியம். அதன் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இந்த பணியின் மூலம், தேர்தல் கமிஷன் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. பிகாரில் திருத்த பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி உள்ளன.
வளர்ச்சிக்கு வாக்களித்த மக்கள்
பிகார் மக்கள் பொய்களை தோற்கடித்து,, ஜாமினில் வெளியே வந்தவர்களை ஆதரிப்பது இல்லை என்பதை நிரூபித்துள்ளனர். மாநிலம் வளர்ச்சியடைய மக்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். புதிய தொழில்கள், முதலீடுகள் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் இனி அதிகமாக கிடைக்கும். அமைதியான வாக்குப்பதிவு நடந்தது. நக்சல் பாதித்த தொகுதிகளிலும் மக்கள் பயமின்றி மாலை 6 மணி வரை பயமின்றி வாக்களித்தனர்.
காங்கிரஸ் கட்சி பிளவுபடும்
கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி என்றும், அவர்களுக்கு அக்கட்சி பெரிய சுமை என்றும் நான் ஏற்கனவே விமர்சித்திருந்தேன். அதை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டி இருக்கின்றன. பொய் குற்றச்சாட்டு, ஜாதிவாரி, பிரிவினைவாத கொள்கைகளை காங்கிரஸ் பின்பற்றுகிறது. இதனால், காங்கிரஸ் மீண்டும் பிளவுபட வாய்ப்பு உள்ளது. குளத்தில் குதித்த காங்கிரஸ் தலைவர், கூட்டணி கட்சிகளையும் மூழ்கடிக்கவே பயிற்சி எடுத்தார்.
தமிழகத்திலும் வாகை சூடுவோம்
பிகாரில் கிடைத்து இருக்கும் வெற்றி, கேரளா, தமிழகம், புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்க பாஜக தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. கங்கை நதி பிகாரில் இருந்து மேற்கு வங்கத்துக்கு பாய்வது போல், மேற்கு வங்கத்திலும் வெற்றி கிடைக்கும். பாஜக தொண்டர்களால் முடியாதது என்று எதுவுமே இல்லை. அவர்கள் மனது வைத்தால் எதையும் சாதிப்பார்கள்” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
======