கர்நாடக மாநிலம் பெங்களூிவில் மஞ்சள் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதேபோன்று, பெங்களூருவில் இருந்து வட மாநில நகரங்களுக்கு 3 வந்தே பாரத் ரயில் சேவையையும், துவக்கி வைத்தார்.
பாகிஸ்தானை மண்டியிட வைத்தோம் :
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு ஆபரேஷன் சிந்தூரின் போது போது சரியான பதிலடி கொடுத்தோம். பயங்கரவாதத்துக்கு ஆதரவாக இருந்த பாகிஸ்தானை சில மணி நேரத்தில் மண்டியிட வைத்தோம். புதிய இந்தியாவின் வலிமையை கண்டு உலகமே வியந்தது.
3வது பொருளாதாரமாக இந்தியா :
இந்தியா மூன்றாவது சிறந்த பொருளாதார நாடாக மாறுவதை நோக்கி வேகமாக நகர்கிறது. 2014ல் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ இருந்தது இப்போது 24 நகரங்களுக்கு விரிவடைந்துள்ளது. 2014ல் 3 தேசிய நீர்வழிகள் மட்டுமே செயல்பாட்டில் இருந்தன, இப்போது 30 நீர்வழிகள் உள்ளன.
யுபிஐ பரிவர்த்தனையில் சாதனை :
இந்தியாவில் 50% க்கும் அதிகமான பணப்பரிவர்த்தனை UPI மூலம் நடக்கிறது. புதிய இந்தியாவின் அடையாளமாக பெங்களூரு மாறியுள்ளது. உலக அளவில் தொழில்நுட்ப துறையில் இந்தியாவின் கொடியை ஏற்றிய நகரம் இது. பெங்களூரூவின் வெற்றிக்கு பின்னணியில் இங்குள்ள மக்களின் கடுமையான உழைப்பும் திறமையும் அடங்கி இருக்கிறது.
அதிவேக வளர்ச்சியில் இந்திய ரயில்வே :
2014க்கு முன், ரயில் பாதையில் சுமார் 20,000 கிலோ மீட்டர் மின்மயமாக்கப்பட்டது. கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் 40,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான ரயில் பாதைகள் மின்மயமாக்கியுள்ளோம். 2014 வரையில் இந்தியாவில் வெறும் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது அதன் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. வளர்ச்சி பாதையில் பீடுநடை போடும் இந்தியா, உலக அளவில் வலிமையான பொருளாதார நாடாக விரைவில் மாறும்” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
===