Prime Minister Modi has said that India's bright future lies in the hands of its youth, and they are ANI
இந்தியா

இளைஞர்கள் கையில் இந்தியாவின் எதிர்காலம் : பிரதமர் மோடி பெருமிதம்

இளைஞர்கள் கையில்தான் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலம், அவர்களே நாட்டின் மூலதனம் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருக்கிறார்.

Kannan

51,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு :

வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக 51 ஆயிரம் இளைஞர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கான நியமன கடிதங்களை டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், “ நமது நாடு 3வது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி நகர்கிறது. கடந்த 11 ஆண்டுகளில் பாஜகவின் ஆட்சியில் நாடு ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

லட்சக் கணக்கான இளைஞர்களுக்கு வேலை :

இதுபோன்ற வேலைவாய்ப்பு விழாக்கள் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். அவர்கள் நமது நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பங்களித்து வருகின்றனர். சிலர் நாட்டை பாதுகாக்கும் பணியில் இருக்கிறார்கள். சிலர் அனைவருக்கும் உதவுகிறார்கள். சிலர், நாட்டின் நிதியை வலுப்படுத்தும் பணியை மேற்கொள்கிறார்கள். பலர் நாட்டின் தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துகிறார்கள். துறைகள் வெவ்வேறா இருந்தாலும், அவர்களின் நோக்கம் என்பது நாட்டுக்கான சேவைதான்.

சேவையே இளைஞர்களின் இலக்கு :

தனியார் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அங்கீகரித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தனியார் துறையில் தங்கள் முதல் வேலையைப் பெறும் இளைஞர்களுக்கு அரசு ரூ. 15,000 வழங்கும். அதாவது, அவர்களின் முதல் வேலையின் முதல் சம்பளத்துக்கு அரசாங்கம் பங்களிக்கும். இந்த திட்டத்துக்காக அரசு பட்ஜெட்டில் ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கி உள்ளது. இந்த திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும்.

உற்பத்தி துறையில் சாதிக்கும் இந்தியா :

இன்று இந்தியாவின் மிகப் பெரிய வலிமைகளில் ஒன்றாக உற்பத்தித் துறை விளங்குகிறது. உற்பத்தித் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக மேக் இன் இந்தியா பிரச்சாரத்தை நாங்கள் வலுப்படுத்தி உள்ளோம். ஆபரேஷன் சிந்தூருக்குப்பிறகு பாதுகாப்புத் துறையில் உற்பத்தி பற்றி நிறைய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கான உற்பத்தி ரூ. 1.25 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது.

ஜனநாயகம், மக்கள்தொகையே வலிமை :

இன்று இந்தியா 2 வரம்பற்ற சக்திகளைக் கொண்டுள்ளது என்பதை உலகம் ஒப்புக்கொள்கிறது. ஒன்று, நமது மக்கள்தொகை. இரண்டாவது நமது ஜனநாயகம். இளைஞர்களின் பலம் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்துக்கான மிகப் பெரிய சொத்து, மிகப் பெரிய உத்தரவாதம். இந்த சொத்தை செழிப்புக்கான சூத்திரமாக மாற்றுவதில் எங்கள் அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

வெளிநாடுகளில் இந்திய இளைஞர்கள் சக்தி :

அண்மையில் 5 நாடுகளுக்குச் சென்றுவிட்டு திரும்பினேன். ஒவ்வொரு நாட்டிலும் இந்தியாவின் இளைஞர் சக்தியின் எதிரொலியை கேட்க முடிந்தது. அந்த நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் நிச்சயமாக நமது இளைஞர்களுக்கு தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பயனளிக்கும்” இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

======