தலைமைப் பொறுப்பில் மோடி
8,931 Days In Office, PM Modi Becomes India's Longest-Serving Head Of Government : குஜராத் மாநிலத்தில் பிறந்த நரேந்திர தாமோதர தாஸ் மோடி, 2001ம் ஆண்டு அம்மாநில முதல்வரானார். 2014 மே 21 வரை அவர் தொடர்ந்து, 14 ஆண்டுகளுக்கும் மேலாக, அந்தப் பொறுப்பில் இருந்தார். மூன்று முறை தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை மோடி அலங்கரித்தார்.
பின்னர் 2014 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற அவர், நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றார். பின்னர், 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று தற்போது மூன்றாவது முறையாகப் பிரதமராக நீடிக்கிறார்.
சிக்கிம் முதல்வரின் சாதனை முறியடிப்பு
அந்த வகையில் 24 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை பொறுப்பை தொடர்ச்சியாக பிரதமர் மோடி வகித்து வருகிறார். இதற்கு முன்பு சிக்கிம் மாநில முதல்வராக 24 ஆண்டுகளுக்கும் மேலாக (8,930 நாட்கள்) பதவி வகித்த பவன் குமார் சாம்லிங்கின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்துள்ளார்.
நாட்டின் மீது பக்தி - ராஜ்நாத் பாராட்டு
அவருக்கு பாராட்டு தெரிவித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "பிரதமர் நரேந்திர மோடி இப்போது இந்தியாவில் மிக நீண்ட காலம் அரசுத் தலைவராக இருந்தவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
நாட்டின் மீதும் மக்கள் மீதும் கொண்டுள்ள தூய பக்தியே பிரதமர் மோடியை வரையறுக்கிறது. குஜராத் முதல்வராக அவர் காட்டிய உறுதி முதல், பிரதமராக அவர் வழங்கும் அர்ப்பணிப்புள்ள தலைமை வரை, அவரது வாழ்க்கை ஒரு தொடர்ச்சியான சேவைப் பயணமாகும்" என கூறியுள்ளார்.
அர்ப்பணிப்பே அவரது உறுதி - அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், "சேவை, கடின உழைப்பு மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பில் உருவான மைல்கல் இது. பிரதமர் நரேந்திர மோடி, சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கின் 8,930 நாட்கள் சாதனையை முறியடித்து, இந்தியாவின் நீண்டகால அரசுத் தலைவராகி இருக்கிறார்.
8,931 நாட்கள் பொதுவாழ்வு
முதலில் குஜராத் முதல்வர், தற்போது பிரதமர் என 8,931 நாட்கள் பொதுவாழ்வில் அவர் இருப்பது, ‘தேசமே முதல்' என்ற கொள்கைக்கும், நேர்மையான செயல்பாட்டுக்கும், அயராத மக்கள் சேவைக்கும் சான்றாகும்" என கூறியுள்ளார்.
இன்ஸ்டாவில் 10 கோடி
இந்த சாதனையைத் தவிர, பிரதமர் மோடியின் உலகளாவிய டிஜிட்டல் செல்வாக்கும் அதிகரித்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களைக் கடந்த முதல் உலகத் தலைவர் என்ற பெருமையை அவர் சமீபத்தில் பெற்றார்.
இது அதிபர் டொனால்டு ட்ரம்பின் (4.3 கோடி) பின்தொடர்பாளர்களைவிட 2 மடங்கு அதிகமாகும்.
===