வலுப்பெறும் நல்லுறவு
PM Modi To Go On 3 Nation Tour To Jordan, Ethiopia, Oman From 15th : அண்டை நாடுகள் மட்டுமின்று அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை வலுப்படுத்தும் முயற்சியில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாகவே இந்தியாவுக்கு எதிராக இருக்கும் சீனா போன்ற நாடுகளும் நட்புறவை கடைபிடித்து வருகின்றன.
ஆப்கானிஸ்தானும் இந்தியாவின் பக்கம்
தீவிரவாதத்திற்கு ஆதரவு தரும் பாகிஸ்தானை தவிர்த்து மற்ற நாடுகள், இந்தியாவுடன் கரம் கோர்க்கவே விரும்புகின்றன. தலிபான்களால் ஆட்சி செய்யப்படும் பாகிஸ்தானும், இந்தியாவை நட்புக்கு முன்னுரிமை அளிக்கிறது.
வெளிநாடு செல்லும் பிரதமர் மோடி
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாள் சுற்றுப்பயணமாக ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு செல்கிறார். 15ம் தேதி ( திங்கட்கிழமை ) அவர் தனது சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார்.
ஜோர்டான் (டிசம்பர் 15 - 16)
முதலில், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி இரண்டு நாட்கள் அந்த நாட்டிற்கு செல்கிறார்.
ஜோர்டான் மன்னரைச் சந்தித்து, இந்தியாவுக்கும் ஜோர்டானுக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதோடு, பிராந்திய விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்கிறார்.
எத்தியோப்பியா (டிசம்பர் 16 - 17)
சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக, 16 மற்றும் 17ம் தேதிகளில் பிரதமர் மோடி எத்தியோப்பியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடி எத்தியோப்பியாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.
எத்தியோப்பிய பிரதமருடன் இந்தியா-எத்தியோப்பியா இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்கள் குறித்தும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஓமன் (டிசம்பர் 17 - 18)
இறுதி கட்டமாக, சுல்தான் ஹைத்தம் பின் தாரிக்கின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி டிசம்பர் 17 முதல் 18 வரை ஓமன் நாட்டில் பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடி ஓமனுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் ஆகும்.
பல நூற்றாண்டுகளாக இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையே வலுவான நட்புறவு இருக்கிறது. வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் உள்ள இருதரப்பு கூட்டுறவை மேம்படுத்தும் இந்தப் பயணம் ஒரு வாய்ப்பாக இருக்கும்.
===============