குளிர்கால கூட்டத் தொடர்
PM Modi welcomes Vice President, Rajya Sabha chairman CP Radhakrishnan to House : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. டிசம்பர் 19ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் முதன் முதலாக ராஜ்யசபா தலைவராக தனது பணியை இன்று தொடங்கினார்.
சிபிஆர்.க்கு மோடி பாராட்டு
இந்தநிலையில், ராஜ்யசபாவுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, அவரை வாழ்த்தி பேசினார். ” இன்றைய தினம் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு பெருமைக்குரிய நாளாகும். ராஜ்யசபா தலைவராக பணியை தொடங்கும் உங்களை மனதார வாழ்த்துகிறேன். அவை உறுப்பினர்கள் சார்பிலும் உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சமூக சேவையே இலக்கு
அவரது அனுபவமும் வழிகாட்டுதலும், ராஜ்யசபா சிறப்பாக செயல்படுவததற்கு உதவியாக இருக்கும். அரசியல் என்பது உங்கள் பயணத்தின் ஒரு பகுதி மட்டுமே. உங்கள் இளமைக்காலம் முதல் இப்போது வரை சமூகத்துக்கு சேவையாற்றுவது தான் முக்கிய பணியாக இருந்து வருகிறது என்பதை நான் அறிவேன்.
அசைவ உணவை தவிர்த்தார்
உங்கள் ஆளுமைத்திறன் என்பது, சேவை, அர்ப்பணிப்பு, பொறுமை ஆகியவற்றை எதிரொலிப்பாக இது அமைந்துள்ளது. காசிக்கு வந்து சென்றது முதல் அசைவ உணவு உண்பதில்லை என்ற முடிவை சி.பி.ராதாகிருஷ்ணன் எடுத்துள்ளார். அசைவ உணவு உண்பது தவறு என்று நான் கூற வில்லை. ஆனால், காசியின் எம்பி என்கிற முறையில் அவரது முடிவை மனதார ஏற்றுக் கொள்கிறேன்.
தலைமைப் பண்பில் சிறந்தவர்
சி.பி.ராதாகிருஷ்ணன், தன் மாணவப்பருவம் முதலே, தலைமைப்பண்பை சிறப்பாக வெளிப்படுத்தியவர். சுலபமான வழியை காட்டிலும், போராட்ட வழியே சிறந்தது என்ற கொள்கையை கொண்டவர். கோவையில் 1998ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் நீங்கள் மயிரிழையில் உயிர் தப்பினீர்கள் என்பதை நாடு அறியும்.
உண்மையான போர் வீரர் சிபிஆர்
அப்படி தப்பியதை வாய்ப்பாக கருதி, நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டீர்கள். இது, உங்களது நேர்மறை செயல்பாட்டை வெளிக்காட்டுகிறது. எமர்ஜென்சி காலத்தில் உண்மையான போர் வீரராக இருந்து பணியாற்றியவர் சிபிஆர்.
எளிமையே ஜனநாயகத்தின் வலிமை
பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபட்டவர். அமைப்பை சிறப்பாக வழிநடத்தும் திறன் கொண்டவர். மக்களை திரட்டுவதற்காக தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்பிலும் மிளிர்ந்தவர்.
எளிய பின்புலத்தில் இருந்து துணை ஜனாதிபதி வரை பதவி உயர்வு பெற்றுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனின் உயர்வு, ஜனநாயகத்தின் பலத்தை எடுத்துரைக்கிறது. நாட்டுக்கு சேவையாற்றுவதற்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். .
====