அமளிக்கு காரணம் என்ன
Congress MP Rahul Gandhi break the Parliament rules : இந்திய - சீன மோதலின் போது, சீனாவின் டாங்குகள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக முன்னாள் ராணுவத் தளபதி நரவனே தனது நூலில் கூறியுள்ளதாக ராகுல் காந்தி கூறியதை அடுத்து, மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.
ராகுல் குறிப்பிட்டு பேசியது என்ன
டோக்லாமில் ஒரு முகட்டை கைப்பற்ற 4 சீன டாங்குகள் நுழைந்ததாக முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே தனது நூலில் கூறியுள்ளதாக ராகுல் குறிப்பிட்டார்.
அனுமதியில்லாத பேச்சுக்கு எதிர்ப்பு
இதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “இந்தப் புத்தகம் இன்னும் வெளியிடப்படவில்லை என்பதால் அதன் அடிப்படையில் ராகுல் பேச முடியாது” என்றார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இதே கருத்தை வலியுறுத்தினார்.ஓம் பிர்லாவும், பின்னர் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் எதிப்பை தெரிவித்தனர் .
ஓம் பிர்லா எதிர்ப்பு
ஒரு புத்தகத்தில் இருந்து அவ்வாறு மேற்கோள் காட்டுவதற்கு எதிரான அவை விதிகளைக் குறிப்பிட்டனர். அது வெளியிடப்பட்டிருந்தாலும் கூட, அவையின் நடவடிக்கைகளுடன் தொடர்பில்லாத எந்தவொரு புத்தகத்தில் இருந்தும் மேற்கோள் காட்டுவது அனுமதிக்கப்படாது என ஓம் பிர்லா கூறினார்.
மக்களவை விதி கூறுவது என்ன
நாடாளுமன்ற அலுவலக வட்டாரம் கூறுகையில், ‘மக்களவை எம்.பி. தனது பேச்சில் ஒரு புத்தகம், செய்தித்தாள் அல்லது கடிதத்தில் இருந்து மேற்கோள் காட்டுவது, அவையின் நடவடிக்கைகளுக்குத் தொடர்புடையதாக இருந்தாலன்றி, தடை செய்யப்பட்டுள்ளது. இதை மக்களவை விதி 349(I) குறிப்பிடுகிறது.
சபாநாயகர் அனுமதியை பெறவில்லை
இவ்வாறு செய்வதற்கு முன்பு சில விதிகளை அந்த எம்.பி. பின்பற்றுவது மிகவும் முக்கியம். இந்த விதியின்படி அந்த எம்பி, தனது உரைக்கு முன்பாக சபாநாயகரின் அனுமதி பெற வேண்டும். ஏனெனில், இந்த விதியை மீறும் எம்.பி. தனது பதவியை இழக்க நேரிடும்” என்று தெரிவிக்கின்றனர்.
ராகுல் பேசியதற்கு நடவடிக்கையா?
சபாநாயகரின் அனுமதி பெறாதது மட்டுமின்றி, ராகுல் காந்தி குறிப்பிட்ட நூலானது இன்னும் வெளியிடப்படவில்லை. ராகுலின் இந்த நடவடிக்கை நாடாளுமன்றக் குழுவின் விசாரணைக்கு உகந்ததாக கருதப்படுகிறது.
எனவே, ராகுலின் சீனா பேச்சு மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சபாநாயகர் தனது சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை செய்து வருவதாகவும் தெரிகிறது.