கரூர் விபத்து - 41 பேர் பலி :
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் பலியானார்கள். 90க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அருணா ஜெகதீசன் விசாரணை :
தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணையமான, நீதிபதி அருணா ஜெகதீசன், 2வது நாளாக விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தை பார்வையிட்ட அவர், அங்கிருந்தவர்களிடம் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனைகளில் சிசிச்சை பெற்று வருவோரிடமும் அவர் விசாரித்து அறிந்தார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்தினரையும் சந்தித்து அவர் விசாரணை நடத்தினார்.
புதிய நிலைப்பாட்டில் காங்கிரஸ்? :
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகித்து வருகிறது. இதேபோன்று, இந்தியா கூட்டணியில் திமுகவும் இடம்பெற்று இருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் நீடிக்கும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர்கள் தெரிவித்து வந்தாலும், ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி என்ற குரல்களும் ஒலித்த வண்ணம் உள்ளன.
விஜயிடம் ராகுல் காந்தி பேச்சு :
கரூர் துயரச் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்து இருந்த ராகுல் காந்தி, தவெக மற்றும் விஜயை விமர்சிக்கவே இல்லை. பொதுவாக பாஜக ஆளும் மாநிலம் என்றால் அல்லது பாஜக தொடர்புடைய பிரச்சினை என்றால், அவரது குரல் ஓங்கி ஒலிக்கும். ஆனால், கரூர் விவகாரத்தில் தவெக மீது அவர் எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை.
இந்தநிலையில், திமுகவுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயிடம் காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தொலைபேசி உரையாடினார்.
இரங்கல் தெரிவித்தார் ராகுல் :
கரூரில் தவெக பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்தும், நெரிசல் ஏற்பட காரணங்கள் என்ன என்பது பற்றியும் ராகுல் கேட்டறிந்தார். கரூர் சம்பவத்திற்காக விஜயிடம் தனது இரங்கலையும் அவர் தெரிவித்துக் கொண்டார். பாதிக்கப்பட்டோரின் நிலை குறித்து விஜயிடம் ராகுல் கேட்டறிந்ததாகவும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. சுமார் இருவரும் 15 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடல் நடத்தியதாக தெரிகிறது.
ஸ்டாலினிடமும் ராகுல் பேச்சு :
முன்னதாக, முதல்வர் ஸ்டாலினிடமும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கரூர் விபத்து குறித்து ராகுல் காந்தி கேட்டறிந்தார். தவெக தலைவர் விஜயிடம் ராகுல் காந்தி பேசி இருப்பது, சட்டமன்ற தேர்தல் கூட்டணி விவகாரத்தில், காங்கிரஸ் வேறு முடிவை எடுக்க இருக்கிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
=======================