Rahul Gandhi, who support for actor Vijay in 'Jana nayagan' film issue, has created a stir in Tamil Nadu politics. Google
இந்தியா

"தமிழ் மக்களின் குரலை ஒடுக்க முடியாது” : விஜய்க்கு ஆதரவாக ராகுல்

Rahul Gandhi Tweet About Jana Nayagan Movie Issue : ’ஜன நாயகன்’ பட விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள ராகுல் காந்தி, தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

Kannan

விஜய் ‘ஜனநாயகன்’

Rahul Gandhi Tweet About Jana Nayagan Movie Issue : நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் கடந்த 9ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. இதற்கு சென்சார் போர்டின் தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில், பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது.

நீதிமன்றத்தில் ‘ஜனநாயகன்’

தனி நீதிபதி யு\ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நிலையில், இரு நீதிபதிகள் அமர்வு, அதற்கு தடை விதித்தது. எனவே, படம் வெளியாவது தடைப்பட்டது.

சென்சார் போர்டு ‘கேவியட் மனு’

இதைத்தொடர்ந்து படத் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கிறது. தங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று, சென்சார் போர்டு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிபிஐ விசாரணைக்கு ஆஜரான விஜய்

இந்தநிலையில், டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஜய் நேற்று ஆஜராகி, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

பல மணி நேரம் நீடித்த விசாரணைக்கு பிறகு அவர் இன்று பிற்பகல் சென்னை திரும்பினார். மீண்டும் அடுத்த வாரம் விஜய் டெல்லி சென்று விசாரணைக்கு ஆஜராவார் எனத் தெரிகிறது.

காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு

ஜனநாயகன் பட விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக தமிழக காங்கிரசார் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். எம்பிக்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்ரவர்த்தி போன்றோர் சென்சார் போர்டின் மீது தங்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தினாலும், அதிக இடங்கள், ஆட்சியில் பங்கு என்ற காங்கிரசின் குரலுக்கு வலு சேர்ப்பதாகவே அமைந்து இருக்கிறது.

தவெக பக்கம் சாயுமா காங்கிரஸ்?

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகும் என்றும், தவெகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

விஜய்க்கு வாய்ஸ் கொடுத்த ராகுல்

இந்தச் சூழலில் பரபரப்பை மேலும் கிளப்பும் வகையில், விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக ராகுல் காந்தி குரல் கொடுத்து இருக்கிறார்.

டெல்லியில் இருந்து விஜய் சென்னை திரும்பிய நிலையில், ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்வீட்டில், 'ஜன நாயகன்' படத்தைத் தடுப்பதற்காக தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் முயற்சிக்கிறது.

தமிழ் கலாச்சரத்தின் மீது தாக்குதல்

மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் முயற்சி தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் எனவும் ராகுல் காந்தி விமர்சித்திருக்கிறார்.

ஒருபோதும் வெற்றிபெற மாட்டார்கள்

தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் நீங்குள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள் மோடி என்று ராகுல் பதிவிட்டு இருக்கிறார்.

ஏற்கனவே, மெர்சல் பட விவகாரத்தின் போது மத்திய அரசை கண்டித்து, விஜய்க்கு ஆதரவாக ராகுல் பதிவிட்டு இருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

திமுக கூட்டணிக்குள் குழப்பம்

ஜனநாயகன் விஷயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து, விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இப்படி இருக்கையில் ராகுல் காந்தியே நேரடியாக விஜய்க்கு ஆதரவாக களத்தில் இறங்கியிருப்பது, காங்கிரஸ் இடம்பெற்றிருக்கும் திமுக கூட்டணிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

================