Railway Minister Ashwini Vaishnav has said that if the high-speed train service between Chennai, Bengaluru and Hyderabad is put into operation, the travel time will be significantly reduced. Google
இந்தியா

அதிவேக ரயில் சேவை : சென்னை-பெங்களூரு 1.13 மணி, ஐதராபாத் 2.55 மணி

சென்னை - பெங்களூரு, ஐதராபாத் இடையே அதிவேக ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்தால், பயண நேரம் கணிசமாக குறையும் என்று, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்து இருக்கிறார்.

Kannan

Union Budget 2026-27 : தமிழகத்திற்காக அதிவேக ரயில், கனிம தொழில் பெரு வழித்தடம் உள்ளிட்ட அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், தாது வளம் மிக்க மாநிலங்களான ஒடிசா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டை உள்ளடக்கிய அரிய வகை கனிம தொழில் பெரு வழித்தடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக ரயில் வழித்தடங்கள்

இதே போன்று, தென்னிந்தியாவின் நீண்ட காலக் கனவான ஹைதராபாத் - சென்னை, சென்னை- பெங்களூரு இடையே அதிவேக ரயில் இயக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இது நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தைக் குறைப்பதோடு, வர்த்தக போக்குவரத்தையும் மேம்படுத்தும்.

சென்னை - பெங்களூரு பயண நேரம் 1.13 மணி

சென்னையில் இருந்து பெங்களூரு, சென்னையில் இருந்து ஐதராபாத்திற்கு இயக்கப்படும் அதிவேக ரயில்கள், பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும்.

சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு மணி நேரம் 13 நிமிடத்தில் செல்லும் வகையில் அதிவேக ரயில் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக முக்கோணம்

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை, பெங்களூர், ஐதராபாத் ஆகிய 3 நகரங்களை இணைத்து "தெற்கு அதிவேக முக்கோணம்" என்ற பெயரில் புதிய திட்டம் உருவாக்கப்படும் எனக் கூறினார்.

இத்திட்டம் மூலம் தென்மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, கேரளா மற்றும் புதுச்சேரி பகுதிகள் பயன் அடையும் என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

வந்தே பாரத் - 4 மணி நேரம்

சென்னையில் இருந்து பெங்களூருவிற்கு வந்தே பாரத் ரயில் சுமார் 4 மணிநேரத்தில் தற்போது செல்கிறது

அதிவேக ரயில் பயன்பாட்டிற்கு வந்தால், சென்னையில் இருந்து பெங்களூருவிற்கு ஒரு மணிநேரம் 13 நிமிடங்களில் சென்று விடலாம்.

சென்னை - ஐதராபாத் 2.55 மணி நேரம்

இதே போன்று, சென்னையில் இருந்து ஐதராபாத்திற்கு 2 மணிநேரம் 55 நிமிடங்களில் சென்றடையலாம். விமான பயணத்திற்கு இணையான நேரத்தில் சென்னையில் இருந்து பெங்களூரு, ஐதராபாத்தை சென்றடைய முடியும்.

எனவே, அதிவேக ரயில் வழித்தடம், பயணிகள், வணிகர்களுக்கு பேருதவியாக இருக்கும். வந்தே பாரத் ரயிலுக்கு இணையாக கட்டணம் இருக்க வாய்ப்பு உள்ளது.

=====