ரயில் நிலையங்களில் கூட்டம்
Yatri Suvidha Kendra at railway stations : இந்தியாவில் போக்குவரத்து என்றால் அதில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்களை எளிதாக இணைக்கும், அழைத்து செல்லும் சிறப்பான பணியினை ரயில்கள் மேற்கொண்டு வருகின்றன. எவ்வளவு தூரம் என்றாலும், ரயிலில் பயணித்தால் அலுப்பு என்பதே தெரியாது.
பண்டிகை காலங்களில் போது பெரும்பாலும் எல்லா ரயில் நிலையங்களிலும் கூட்டம் நிரம்பி வழியும். பெரு நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் எப்போதும் நெரிசல் இருக்கும். பகல் மட்டும் கிடையாது நள்ளிரவு நேரத்திலும் இங்கு பயணிகள் காத்திருப்பது என்பது சகஜமான ஒன்று.
ரயில் நிலையங்களில் பெரும் நெரிசல்
குறிப்பாக விழாக் காலங்களில் ஒரே சமயத்தில் பல்லாயிரக் கணக்கானோர் குவிவதால், பெரும் நெரிசல் ஏற்படுகிறது. பயணியர் மட்டுமின்றி, வழியனுப்ப வந்தவர்கள், வியாபாரிகள், ரயில்வே ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் ரயில் நிலையத்தில் குவிவதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
'யாத்ரி சுவிதா கேந்திரா'
இதை தவிர்க்க, இந்த பிரச்னைக்கு தீர்வு காண, 'யாத்ரி சுவிதா கேந்திரா' என்ற திட்டத்தை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்திருந்தார். பயணியர் நடமாட்டத்தை எளிதாக்குவதும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதும், ரயில் நிலையத்திற்குள் இதற்கான பணியை செம்மைப்படுத்துவதுமே திட்டத்தின் நோக்கம்.
தனி நுழைவு வாயில்
இந்த திட்டத்தின்படி, முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருப்போருக்கு ரயில் நிலையங்களில் பிரத்யேக நுழைவு வாயில்கள் அமைக்கப்படும். இதன் மூலம், கூட்ட நெரிசலில் இருந்து பயணியரை காப்பதோடு, ரயில் நிலையத்திற்குள் சுமுகமான அணுகுமுறை உருவாக்கப்படும்.
பயணியர் அறை விரிவாக்கம்
இதற்காக, பயணியர் காத்திருப்பு அறை போதுமான பரப்பில் கட்டப்படும். அங்கிருந்து உரிய முறையில், பிளாட்பாரங்களுக்கு எளிதாக செல்வதற்கான வழி ஏற்படுத்தப்படும். இதற்கு வசதியாக ரயில் நிலையங்களில் தேவைப்படாத வழிகள் அனைத்தும் அடைக்கப்படும்.
சரியான திட்டமிடலுடன் அணுகுமுறை
சரியான திட்டமிடலுடன் கூடிய தடுப்புகள் அமைக்கப்பட்டு, முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் உடைய பயணியர் மட்டுமே நேரடியாக பிளாட்பாரத்திற்கு செல்வர். அதுவரை, முன்பதிவு செய்யாத பயணியர், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் எல்லாம் வெளியில் காத்திருப்பர். தேவையான இடங்களில் சிறிய மேம்பாலங்கள், அதிநவீன வசதிகளுடன் கூடிய, 'சிசிடிவி' கேமராக்கள், கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும்.
அனைவருக்கும் அடையாள அட்டை
ரயில்வே ஒப்பந்ததாரர்கள், கடை வைத்திருப்போர், பிளாட்பார வியாபாரிகள், பணியாளர்கள் என அனைவருக்கும், புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும். அதிகாரப்பூர்வ அனுமதி உள்ளவர்கள் மட்டுமே பிளாட்பாரங்களில் நுழைய முடியும். இந்த திட்டம், நாட்டிலேயே முதன்முறையாக, புதுடில்லி ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் புதிய திட்டம் அமல்
இதற்காக, 5,281 சதுர மீட்டர் பரப்பளவில் தனிப்பகுதி ஏற்படுத்தப்பட்டு, 22 டிக்கெட் கவுன்டர்கள், 25 தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள், 17 சிசிடிவி கேமராக்கள், ஐந்து லக்கேஜ் ஸ்கேனர்கள், 'வைபை' இன்டர் நெட் வசதி, 120 இருக்கைகள், 18 மின்விசிறிகள், ஆர்.ஓ., குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
76 இடங்களில் 'யாத்ரி சுவிதா கேந்திரா'
சிறப்பு வாய்ந்த, பயணிகளுக்கு பயன் தரக்கூடிய 'யாத்ரி சுவிதா கேந்திரா' திட்டத்தை நாடு முழுதும் விரிவுபடுத்தப்போவதாக, ரயில்வே அமை ச்சகம் அறிவித்துள்ளது. அதற்காக, பயணியர் வருகை அதிகம் உள்ள 76 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப் பட்டுள்ளன.
அந்த பட்டியலில், மும்பை, ஹவுரா, பாட்னா, தர்பாங்கா, புவனேஸ்வர், டில்லி ஆனந்த் விகார், டில்லி நிஜாமுதீன், கான்பூர், மதுரா, ஆக்ரா, கோரக்பூர், குவஹாத்தி, செகந்திராபாத், திருப்பதி மற்றும் சென்னை எழும்பூர் ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளன.