Ram Madhav Warning To CM Vijay Congress Alliance Nainar Nagendran Criticism
காங்கிரஸை நம்புவது முட்டாள்தனம் என ராம் மாதவ் விமர்சனம்
காங்கிரஸை நம்பி ஆட்சி புரிவது முட்டாள்தனம் என முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான சி. ஜோசப் விஜய்யை பாஜக தேசிய துணைத் தலைவரும் தமிழக பாஜக பொறுப்பாளருமான ராம் மாதவ் எச்சரித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராம் மாதவ், காங்கிரஸ் ஒரு நம்பிக்கைக்குரிய கட்சி அல்ல என்றும், தனக்கு சாதகமான சூழல் அமையும்போது தனது கூட்டணிக் கட்சிகளைக் கூட அது கைவிட்டுவிடும் என்றும் விமர்சித்தார்.
தோல்வி பயமும் தேர்தல் ஆணையத்தின் மீது பழியும்
அவர் மேலும் கூறியதாவது, தொடர் தோல்வி காரணமாக வாக்கு இயந்திரம் மற்றும் எஸ்.ஐ.ஆர் (SIR) மீது காங்கிரஸ் வீண் பழி சுமத்தி வருகிறது. அவர்கள் வெற்றி பெற்றால் அது நேர்மையான தேர்தல் என்றும், தோல்வியடைந்தால் தேர்தல் ஆணையம் முறைகேடு செய்துவிட்டது என்றும் கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தவெகவுக்கு துரோகம் செய்யும்
தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள முதல்வர் விஜய், காங்கிரசை நம்புவது முட்டாள்தனமாகும். வெற்றி பெறும் கட்சிகள் பக்கம் தாவுவதே காங்கிரஸின் இயல்பு. திமுகவுக்கு துரோகம் செய்தது போல, வாய்ப்பு கிடைத்தால் தவெகவுக்கும் காங்கிரஸ் துரோகம் செய்யும் என்று குறிப்பிட்டார்.
காமராஜரையே ஓரங்கட்டிய வரலாறு
தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸிற்கு என்று சொந்தமாக எதுவுமில்லை; அவர்கள் எப்போதும் வேறொரு கட்சியைச் சார்ந்தே பிழைப்பு நடத்துகிறார்கள்.
'காமராஜர் திட்டம்' மூலம் இந்திரா காந்தியை தேசிய அரசியலின் முன்னிலைக்குக் கொண்டு வர முக்கியப் பங்காற்றிய முன்னாள் முதல்வர் காமராஜரையே, பிற்காலத்தில் ஓரங்கட்டியது காங்கிரஸ் என்பதை முதல்வர் விஜய் நினைவில் கொள்ள வேண்டும் என்று பேசினார்.
தவெக-வை அரசியல் எதிரியாகவே பாஜக பார்க்கும்
தவெக-விற்கு பாஜக ஆலோசனை வழங்குகிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ராம் மாதவ், பாஜக தொடர்ந்து தவெக-வை ஒரு அரசியல் எதிரியாகவே பார்க்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற பாஜக உதவியது என்ற குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், "தவெக ஏதோ ஒரு வெளிப்புற ஆதரவால் வெற்றி பெற்றது என்று கூறுவது, தமிழக மக்களையும் அவர்களின் அரசியல் முதிர்ச்சியையும் அவமதிப்பது போன்றதாகும். ஆளும் கட்சியை பாஜக அரசியல் ரீதியாக எதிர்கொள்ளும்" என்று தெரிவித்தார்.
===============