சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே
சென்னையில் இருந்து பெங்களூரு வரை புதிய எக்ஸ்பிரஸ்வே சாலை திட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 90 சதவீத பணிகள் நிறைவு பெற்ற நிலையில், எஞ்சிய பகுதிகளிலும் பணிகள் முழுமை பெற்றதும், அக்டோபரின் இந்தச்சாலை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.
டோல் கட்டணம் எவ்வளவு?
இதன்மூலம் பயண நேரம் பாதிக்கும் கீழ் குறையும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், டோல் கட்டணம் எவ்வளவு இருக்கும், அதை சமாளிக்க முடியுமா? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வழிகாட்டுதலின் படி, அதிவிரைவு சாலைகளின் கட்டுமானம், பராமரிப்பு செலவுகளுக்காக டோல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதனை டெண்டர் மூலம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிறுவனம் மேற்கொள்கிறது.
258 கி.மீ. தூரம்
கார், ஜூப், வேன், இலகுரக வாகனங்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 65 காசுகள் என வசூலிக்கின்றனர்.
இந்நிலையில் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் அதிவிரைவு சாலையாக NH-7 எனப்படும் கிரீன்ஃபீல்டு எக்ஸ்பிரஸ்வே திட்டப் பணிகள் 258 கிலோமீட்டர் தூரத்திற்கு மும்முரமாக நடந்து வருகின்றன.
சென்னை - பெங்களூரு இருவழி பயணம்
தற்போதைய சூழலில் சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல இரண்டு வழித்தடங்கள் இருக்கின்றன. ஸ்ரீபெரும்புதூர், வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக செல்லலாம்.
இந்த வழியாக சென்றால் 7 டோல்கேட்கள் வருகின்றன. ஒவ்வொன்றிலும் 50 முதல் 80 ரூபாய் வரை என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுமார் 415 ரூபாய் வரை செலவிட வேண்டும்.
மற்றொரு வழி திருவள்ளூர், ராணிப்பேட்டை, சித்தூர், கோலார், ஓஸ்கோடே வழியாக செல்லலாம். இந்த வழித்தடத்தில் 4 டோல்கேட்கள் இடம்பெற்றுள்ளன. அதன்மூலம் 355 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
புதிதாக அமைக்கப்பட்டு வரும் NH-7 எக்ஸ்பிரஸ்வே சாலை மூலம் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பெங்களூருவின் ஓஸ்கோடே வரை எவ்வளவு வசூலிக்கப்பட இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
Closed Loop System
வழக்கமான டோல்கேட் போன்று இதில் சுங்கச்சாவடிகள் இருக்காது. Closed Loop System என்ற Fastag முறையை பின்பற்ற திட்டமிட்டுள்ளனர்.
ஒவ்வொரு டோல்கேட்டாக நின்று செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த அதிவிரைவு சாலையில் நுழையும் போது நம்முடைய காரில் இருக்கும் Fastag பார் கோடு ஸ்கேன் செய்யப்பட்டு விடும்.
அதன்பிறகு அதிவிரைவு சாலையின் எந்த இடத்தில் வெளியேறுகிறீர்களோ, அங்கு மீண்டும் ஸ்கேன் செய்யப்படும். பயணிக்கும் தூரத்திற்கு ஏற்ப டோல் கட்டணம் வசூலிக்கப்படும்.
நகரங்களை இணைக்கும் துணை சாலைகள்
இந்த வழித்தடத்தில் இடையில் உள்ள நகரங்கள் உடன் இணைக்கும் வகையில் பிரத்யேக துணை சாலைகள் அமைக்கப்படுகிறது. எனவே எளிதாக எந்த ஒரு நகருக்கும் செல்லலாம்.
ரூ.250 டோல் கட்டணம்!
கிரீன்ஃபீல்டு எக்ஸ்பிரஸ்வே சாலையில் சென்னை – பெங்களூரு பயணத்திற்கு 250 முதல் 280 ரூபாய் மட்டுமே டோல் கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஓசூர் மற்றும் சித்தூர் வழித்தடத்தில் பயணிப்பதை காட்டிலும் குறைவு.
அதுமட்டுமின்றி பயணம் வெறும் மூன்று மணி நேரத்திற்குள் முடிந்து விடும் என்பதால் பயணிகளுக்கு சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் சிரமமே இல்லாமல் செல்லலாம்.
================