'அந்தியோதயா அன்ன யோஜனா'
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்களுக்கு 'அந்தியோதயா அன்ன யோஜனா' திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ரேஷனில் அரிசி, கோதுமை உட்பட இலவச உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தானிய அளவை மாற்றியமைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நபர் ஒருவருக்கு 7 கிலோவாக மாறுகிறது?
தற்போதைய நடைமுறைப்படி, அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டை வைத்துள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும், அதில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருந்தாலும் மாதந்தோறும் 35 கிலோ உணவு தானியம் (அரிசி/கோதுமை) இலவசமாக வழங்கப்படுகிறது.
ஆனால், இந்த முறையில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாகக் கூறி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ல் திருத்தம் கொண்டுவர இந்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை முன்மொழிந்துள்ளது.
ஜூலை 13 வரை மக்களிடம் கருத்து கேட்பு
இந்த புதிய உணவுப் பாதுகாப்பு திருத்த மசோதா 2026 குறித்துப் பொதுமக்களின் கருத்துகளை ஜூலை 13-ம் தேதி வரை இந்திய உணவு அமைச்சகம் வரவேற்றுள்ளது.
புதிய திட்டத்தின்படி, குடும்பத்திற்கு 35 கிலோ என்பதற்குப் பதிலாக நபர் ஒருவருக்கு மாதம் 7 கிலோ உணவு தானியம் என்ற அடிப்படையில், ஒரு அட்டைக்கு அதிகபட்சமாக 35 கிலோ வரை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய கணக்கீடு
இந்திய அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தின்படி:
ரேஷன் அட்டையில் 2 நபர்கள் இருந்தால் மாதம் 14 கிலோ உணவு தானியம் மட்டுமே கிடைக்கும்.
4 உறுப்பினர்கள் இருந்தால் அதிகபட்சமாக 28 கிலோ உணவு தானியம் மட்டுமே வழங்கப்படும்.
5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இருந்தால் மட்டுமே அதிகபட்ச வரம்பான 35 கிலோ உணவு தானியம் முழுமையாகக் கிடைக்கும்.
குறைந்த உறுப்பினர்களைக் கொண்ட அந்தியோதயா குடும்பங்களுக்கு அதிக உணவு தானியமும், அதிக உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்குக் குறைந்த அளவும் கிடைத்து வந்த முரண்பாட்டைக் களையவே இந்த மாற்றம் கொண்டு வரப்படுவதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரிய குடும்பங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏழை குடும்பங்கள் கடும் அதிர்ச்சி
இந்திய அரசின் இந்த புதிய மசோதா அமலுக்கு வந்தால், அந்தியோதயா ரேஷன் அட்டை வைத்துள்ள ஏழை குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
5 பேருக்கும் குறைவாக இருக்கும் குடும்பங்களுக்கு இனி 35 கிலோ உணவு தானியம் கிடைக்காது என்பதால், ரேஷன் அட்டைதாரர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்த புதிய திட்டத்தை இந்திய அரசு கைவிட வேண்டும் என்று ஏழை மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
=====