Rs 1.11 Lakh for a Rs 10 Note Given by PM Modi? Rumors Surrounding Jhalmuri Vendor Put to Rest!
மேற்கு வங்க மாநில பிரசாரத்தின் போது நடந்த நிகழ்வு
மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி சாலையோரக் கடையில் 'ஜால்முரி' அதாவது காரப்பொரி சாப்பிட்ட நிகழ்வு, தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
குறிப்பாக, அவர் கொடுத்த 10 ரூபாய் நோட்டைச் சுற்றிப் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
யதார்த்தமான செயல் - வைரலான புகைப்படம்
கடந்த வாரம் ஜார்கிராம் பகுதியில் கார் பயணத்தின் போது, சாலையோரம் இருந்த ஒரு கடையைப் பார்த்த பிரதமர் மோடி, அங்கு இறங்கிச் சென்று மேற்கு வங்கத்தின் பிரபலமான ஜால்முரியை வாங்கிச் சாப்பிட்டார்.
பின்னர் அதற்கான தொகையாக 10 ரூபாயை அந்தத் கடைக்காரரிடம் வழங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் 'எக்ஸ்' தளத்தில் வைரலாகின.
ரூ.10 நோட்டுக்கு ரூ.1.11 லட்சமா ?
அரிய வகை ரூபாய் நோட்டுகளைச் சேகரிப்பவர்கள், பிரதமர் மோடி வழங்கிய அந்த 10 ரூபாய் நோட்டைப் பெற ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் சிலர் அந்த நோட்டைத் தங்களுக்கு வழங்கினால், அதற்குப் பதிலாக 1.11 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறி வருவதால் இப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எஸ்பிஜி அதிகாரியா? - கிளம்பிய சர்ச்சை
இதற்கிடையில், பிரதமர் மோடிக்கு ஜால்முரி வழங்கிய நபர் உண்மையில் கடைக்காரர் அல்ல என்றும், அவர் கடைக்காரர் போல வேடமிட்டிருந்த பிரதமரின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த (SPG) அதிகாரி என்றும் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது.
மத்திய அரசு விளக்கம்
இந்தச் செய்தியை மத்திய அரசு உடனடியாக மறுத்துள்ளது. ஜால்முரி விற்ற அந்த நபர் பீகாரைச் சேர்ந்த விக்ரம் ஷா என்கிற தீபக்குமார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் நீண்ட காலமாக அந்தப் பகுதியில் கடை நடத்தி வருவதும் தெரிய வந்துள்ளது.
தீவிர விசாரணை
பிரதமர் வழங்கிய 10 ரூபாய் நோட்டுக்கு ரூ.1.11 லட்சம் தருவதாக ஆசை காட்டியது யார்? மற்றும் கடைக்காரர் பற்றித் தவறான தகவல்களைப் பரப்பியது யார்? என்பது குறித்து தற்போது விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
=====