திட்ட அறிமுகமும் பின்னணியும்
டெல்லியில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,500 நிதியுதவி வழங்கும் ‘டெல்லி லட்சுமி யோஜனா’ திட்டத்தை டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
ரக்ஷா பந்தன் நாளில் லட்சுமி யோஜனா தொடக்கம்
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு டெல்லி தல்கத்தோரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், பயனாளிகளுக்கு அனுமதி கடிதங்களை வழங்கி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
2025 டெல்லி சட்டமன்றத் தேர்தலின் போது பாஜக அளித்த முக்கிய வாக்குறுதிகளில் இத்திட்டமும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பங்கள் மற்றும் சேர்க்கை விவரங்கள்
இத்திட்டத்திற்கான ஆன்லைன் பதிவு ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கப்பட்டது.
9.13 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பதிவு செய்துள்ளனர்.
இதுவரை 6.52 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளன.
தொடக்க விழாவில் சுமார் 4,000 பயனாளிகளுக்கு அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நிதி வழங்கும் முறை மற்றும் நடைமுறை
மாதாந்திர தொகை
தகுதியான பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 நேரடி பணப் பரிமாற்றம் மூலம் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த ரூ. 2,500 முழுமையாக கையில் வழங்கப்படாமல் பிரித்து வழங்கப்பட உள்ளது.
பிரித்து வழங்கும் முறை
அதன்படி இந்த ரூ. 2,500 தொகையில், ரூ. 1,000 பெண்களின் அத்தியாவசிய மற்றும் அன்றாட செலவுகளுக்காக டிஜிட்டல் வேலட் (CBDC) மூலமும், எஞ்சிய ரூ. 1,500 பெண்களின் எதிர்கால சேமிப்பிற்காக RD/FD கணக்கிலும் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் தவணை
இத்திட்டத்தின் மூலம் முதல் தவணைத் தொகையானது செப்டம்பர் 1-ம் தேதி முதல் பயனாளிகளின் கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்திற்கான முக்கியத் தகுதிகள் மற்றும் விலக்குகள்
வயது மற்றும் வசிப்பிடம்: 21 முதல் 60 வயதுடைய, டெல்லியில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வசிக்கும் குடும்பத்தின் மூத்த பெண் விண்ணப்பிக்கலாம்.
வருமான வரம்பு: கண்டிப்பாக குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விலக்குகள்: 4 சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், 3-க்கும் அதிகமான குழந்தைகள் உள்ளவர்கள், அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்கள், வருமான வரி அல்லது ஜிஎஸ்டி செலுத்துவோர் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் இத்திட்டத்திற்குத் தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
=====