Russian Minister’s Fake Video: Delhi Police File FIR Against Prashant Bhushan Google
இந்தியா

ரஷ்ய அமைச்சர் பெயரில் டீப்ஃபேக் வீடியோ... : பிரசாந்த் பூஷணுக்கு நெருக்கடி.!

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியாவை விமர்சித்ததாக AI மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோவைப் பகிர்ந்த விவகாரத்தில் டெல்லி போலீசார் நடவடிக்கை!

NARENDRAN K

ரஷ்யா இந்திய இடையே ஏற்பட்ட வீடியோ சலசலப்பு :

மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷண் மீது டெல்லி காவல்துறை FIR பதிவு செய்துள்ளது.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியாவை விமர்சிப்பது போன்ற போலியாக உருவாக்கப்பட்ட வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த வீடியோவில், இந்தியா ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்திருப்பதால் மட்டும் ரஷ்யாவின் வெளியுறவுக் கொள்கை குறித்து ஆலோசனை சொல்லவோ, தலையிடவோ உரிமை கிடையாது என்பது போன்ற கருத்துகளை லாவ்ரோவ் பேசுவதுபோல் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

வீடியோ போலியானது என உறுதி செய்த வெளியுறவு அமைச்சகம் :

ஆனால், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்தது. இதையடுத்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு, அந்த வீடியோ போலியானது என்றும், டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டு உருவாக்கப்பட்டது என்றும் தெளிவுபடுத்தியது.

ரஷ்ய தூதரகமும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள கருத்துகளை லாவ்ரோவ் தெரிவிக்கவில்லை என்று மறுத்தது.

இதனால், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் இந்தியாவை விமர்சித்ததாகப் பரவிய தகவல் முற்றிலும் தவறானது என்பது உறுதியானது.

பிரசாந்த் பூஷண் மீது என்னென்ன பிரிவுகளில் வழக்கு?

நவம்பர் 3-ம் தேதி டெல்லி காவல்துறையினர் வழக்கமான சைபர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, இந்த விவகாரம் அவர்களது கவனத்துக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு பிரசாந்த் பூஷணின் எக்ஸ் பதிவு தொடர்பாக விசாரணையைத் தொடங்கியது.

தொடர்ந்து, பாரதிய நியாய சன்ஹிதாவின் 336(4), 353(1)(c), 356, 340(2) ஆகிய பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66C பிரிவின் கீழும் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

டீப்ஃபேக் வீடியோக்களால் அதிகரிக்கும் சவால் :

இந்தச் சம்பவம் மீண்டும் ஒரு முக்கியமான விஷயத்தை நமக்கு நினைவுபடுத்துகிறது.

அதுதான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் டீப்ஃபேக் வீடியோக்கள்.

ஒருவர் பேசாத கருத்தைக்கூட அவர் பேசியதுபோல வீடியோ உருவாக்க முடியும்.

குறிப்பாக அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு அமைச்சர்கள் போன்ற முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் பெயரில் இத்தகைய வீடியோக்கள் பரவும்போது, அது இரு நாடுகளுக்கு இடையிலான உறவிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

=====================