Sabarimala Ayyappa Temple Gold Plate Theft Case Issue Former Travancore Devaswom Board President Padmakumar Arrested News in Tamil Google
இந்தியா

சபரிமலை தங்கத்தகடு திருட்டு- முன்னாள் தேவசம் போர்டு தலைவர் கைது!

Sabarimala Gold Theft Case Issue : சபரிமலையில் தங்கத்தகடுகள் திருட்டு வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் கைதுசெய்யப்பட்டார்.

Bala Murugan

தங்கத்தகடுகளில் 4 கிலோ தங்கம் திருட்டு

Sabarimala Gold Theft Case : சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக்கு கதவுகள், துவாரபாலகர் சிலைகள் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த 2019ல் அகற்றப்பட்டு, பின்னர் புதுப்பிக்கப்பட்டது. அப்போது துவாரபாலகா் சிலைகளின் கவசங்களுக்குத் தங்கமுலாம் பூசும் செலவை பெங்களூரைச் சோ்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவா் ஏற்றுக்கொண்டாா்.

பின்னா், அந்தப் பணிகளுக்காகக் கவசங்களை அவா் சென்னைக்கு கொண்டு வந்தாா். இந்த நிலையில், அந்தக் கவசங்களில் சுமாா் 4 கிலோ தங்கம் குறைந்தது கண்டறியப்பட்டு சா்ச்சை ஏற்பட்டது.

தங்கத்தகடு வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள்

இது தொடர்பான வழக்கை உள்ளூர் போலீசார் விசாரித்த நிலையில், எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கு எஸ்ஐடி விசாரணைக்கு மாற்றபட்ட நிலையில், உன்னிகிருஷ்ணன் ஏற்கெனவே கைது செய்யப்பட்டாா்.

அதைத்தொடா்ந்து சபரிமலை முன்னாள் நிா்வாக அதிகாரி பி.முராரி பாபு, சபரிமலை முன்னாள் செயல் அதிகாரி சுதீஷ் குமாா் உள்ளிட்டோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.

முன்னாள் தேவசம் தலைவர் கைது

இதைத்தொடர்ந்து இந்த வழக்கிற்கான விசாரணை தொடர்ந்து வந்த நிலையில், தற்போது இந்த திருட்டு வழக்கில் சந்தேகிக்கபட்ட நபரான தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் என்பவரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில், தங்கத்தகடுகள் திருட்டு வழக்கில் அவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் 5-வது நபராக தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடரும் தீவிர விசாரணை

இதுவரை இருந்த 4 நபர்கள் தற்போது 5 ஆக அதிகரித்துள்ள நிலையில், இந்த திருட்டில் எத்தனை நபர்களுக்கு தொடர்பு இருக்கும் என சிறப்பு புலனாய்வு குழு(Sabarimala Gold Theft Issue) அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

=====