Sabarimala season set to begin, a special train will be operated from Chennai to Kollam source:thamizhalai,ai generated
இந்தியா

"மண்டல பூஜை, மகரவிளக்கு தரிசனம்" : சென்னையில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் : முழு விபரம்...!

சபரிமலை சீசன் தொடங்க இருக்கும் நிலையில்,சென்னையில் இருந்து கொல்லத்திற்கு, சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

Kannan

சபரிமலை ஐயப்பன் கோவில்

உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் ஆண்டு முழுவதும் திறந்து இருக்காது. நடை திறப்பின் போது, மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பனை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம்.

சபரிமலையில் மண்டல பூஜை

ஆனால், மண்டல பூஜையின் போது மட்டும் ஐயப்பன் கோவில் நடை 41 நாட்கள் தொடர்ச்சியாக திறக்கப்பட்டு இருக்கும். சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.

2 மாத காலம் சபரிமலை நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக வருகின்ற 17 அன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படவுள்ளது. மகரவிளக்கு பூஜை வரை 2 மாத காலத்துக்கு பக்தர்களின் தரிசனத்துக்காக நடை திறந்திருக்கும்.

தினமும் 80,000 பேர் தரிசனம்

இந்த காலகட்டத்தில் நாளொன்றுக்கு 80,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை செல்வார்கள்.

சபரிமலை சீசனின் முக்கிய நிகழ்வுகளான மண்டல பூஜை டிசம்பர் 27-ஆம் தேதியும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

சென்னை - கொல்லம் சிறப்பு ரயில்

எனவே, அவர்களின் வசதிக்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கொல்லம் ரயில் நிலையத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரம் தோறும் சிறப்பு ரயில் இயக்கம்

நவம்பர் 21 முதல் ஜனவரி 23 வரை இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில் (06121) சென்னை எழும்பூரிலிருந்து வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறுபுறம் நவம்பர் 22 முதல் ஜனவரி 24 வரை இயக்கப்படும் ரயில் (06122) கொல்லத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இந்த ரயில் பெரம்பூர், காட்பாடி, ஈரோடு, போத்தனூர், கோட்டயம் வழியாக கொல்லத்துக்கு இயக்கப்படுகிறது.

பக்தர்களுக்காக புதிய இணையதளம்

சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியத் தகவல்களையும் பெறும் வகையில் புது இணையதளத்தை ஆலய நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

sabariportaldcpta.in என்ற புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதன்மூலம் கோயில் நிகழ்வுகளை அறியவும், தரிசனத்துக்கான முன்பதிவுகளை மேற்கொள்ளவும், ரயில் மற்றும் பேருந்து சேவைகளை அறியவும், பொருட்கள் திருட்டு மற்றும் காணாமல் போனவர்கள் குறித்து புகாரளிக்கவும் முடியுமென ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. இணையதளத்தில் வாட்ஸ் ஆப் சார்ட் போர்டு வசதியும் உள்ளது.

==============