Seat sharing in Puducherry India Alliance finalized, VCK contesting alone in 3 seats https://x.com/Jagathofficial
இந்தியா

Puducherry : இண்டியா கூட்டணியில் தொகுதி பங்கீடு : காங்கிரஸ் 16, திமுக 14 : விசிக தனித்துப் போட்டி!

புதுச்சேரி இண்டியா கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்ட நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி 3 தொகுதிகளில் தனித்து களம் காண்கிறது.

Kannan

புதுச்சேரி சட்டசபை தேர்தல்

Seat sharing in Puducherry India Alliance finalized, Congress16, DMK 14, VCK contesting alone in 3 seats : புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் என்டிஏ கூட்டணி மற்றும் இண்டியா கூட்டணிக்கு பெரும் சவாலாகவே அமைந்து இருக்கிறது.

தேர்தல் அறிவிப்புக்கு முன்பு தொடங்கிய தொகுதி பங்கீடு, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்று தான் ஒருவழியாக முடிந்து இருக்கிறது.

என்டிஏ கூட்டணி

என்டிஏ கூட்டணியை பொருத்தவரை ஆளும் கட்சியான ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பாஜக 10 இடங்களிலும், அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயக கட்சி தலா 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இண்டியா கூட்டணி

இண்டியா கூட்டணியிலும் பெரும் இழுபறி நீடித்தது. கூட்டணிக்கு தலைமை தாங்க காங்கிரசும், திமுகவும் பிடிவாதம் காட்டியதால், வேட்புமனு தாக்கல் வரை தொகுதி பங்கீடு முடிவுக்கு வரவில்லை. இரண்டு கட்சிகளும் 30 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்தன.

தொகுதி பங்கீடு நிறைவு

இந்தநிலையில், ஒருவழியாக தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்தது. இதுபற்றி

புதுவை திமுக பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்பி விளக்கம் அளித்தார்.

” காங்கிரசும், நாங்களும் தேசத்திற்காக, மொழிக்காக, இனத்திற்காக நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அந்த வகையிலே புதுச்சேரியை வளமான புதுச்சேரியாக, வலிமையான புதுச்சேரியாக மாற்றுவதற்காக நாங்கள் இரண்டு பேரும் மீண்டும் தேர்தலிலே மக்களைச் சந்திக்க இருக்கிறோம்.

காங்கிரஸ் 16, திமுக 14

தொகுதி எண்ணிக்கைகளை பொருத்தவரை, 16 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. திமுக 14 இடங்கள் நிற்கிறது. இதில் கூட்டணிகளுக்கு நாங்க கொடுக்க வேண்டி இருக்கிறது” என்று தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் - தனித்துப் போட்டி

இந்தச்சூழலில், இண்டியா கூட்டணியில் திடீர் திருப்பமாக, புதுச்சேரியில் 3 தொகுதிகளில் மட்டும் விசிக தனித்து போட்டியிடுவதாக திருமாவளவன் அறிவித்துள்ளார். ஊசுடு, நெட்டப்பாக்கம், உழவர்கரை தொகுதிகளில் வி.சி.க தனித்துப் போட்டியிடும்.

புதுச்சேரியில் 3 தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு விசிக ஆதரவளிக்கும். மற்ற தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.

=================