Seven Aam Aadmi Party MPs, including Raghav Sadh, quit the party, joined BJP google
இந்தியா

AAP splits in Rajya Sabha : பாஜகவில் ஐக்கியமான ஆம் ஆத்மி எம்பிக்கள் : கெஜ்ரிவால் அதிர்ச்சி, கட்சி தாவல் சட்டம் பாயுமா?

ராகவ் சத்தா, ஹர்பஜன் உள்பட ஆம் ஆத்மியின் ஏழு எம்பிக்கள், அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில், 3 பேர் பாஜகவில் இணைந்தனர்

Kannan

ஆம் ஆத்மி, ராகவ் சதா

2012ல் ஆம்ஆத்மி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அதில் தன்னை இணைத்துக் கொண்டவர் ராகவ் சத்தா. ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவாலின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கிய இவர், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கெஜ்ரிவாலுடன் கருத்து வேறுபாடு

அண்மைக் காலமாக கெஜ்ரிவாலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து ராகவ் சத்தா, அவரை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராகவ் சத்தாவிடம் இருந்து கட்சிப் பதவி பறிக்கப்பட்டது.

மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக அசோக் மிட்டல் அப்பதவியில் நியமிக்கப்பட்டார்.

பாஜகவில் ராகவ் சதா

இந்த நிலையில் ராகவ் சத்தா ஆம்ஆத்மியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவருடன் சேர்ந்து 7 ஆம்ஆத்மி எம்பிக்களும் விலகுவதாகவும், அவர்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தெரிவித்தனர்.

ராகவ் சத்தா அதிருப்தி

இந்நிலையில், ராகவ் சதா, சந்தீப் பதக், புதியதாக ஆம்ஆத்மி கட்சியின் மாநிலங்களவை துணைத்தலைவராக நியமிக்கப்பட்ட அசோக் மிட்டல் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

ராகவ் சத்தா கூறுகையில், ‘ ஆம் ஆத்மியின் நிறுவன உறுப்பினர்களில் நானும் ஒருவன். எனது வாழ்வின் 15 ஆண்டுகளை ஆம் ஆத்மி கட்சிக்காக நான் அர்ப்பணித்தேன். நாங்கள் பஞ்சாப், டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் கட்சியை வளர்த்தெடுத்தோம்.

ஆம் ஆத்மியில் நேர்மையில்லை

ஆனால், இப்போது கட்சி நேர்மையான அரசியலில் இருந்து விலகிவிட்டது. கட்சி தற்போது ஊழல் மலிந்ததாகவும் சமரசங்களுக்கு உட்பட்டதாகவும் மாறிவிட்டது.

தற்போது இருப்பது பழைய ஆம் ஆத்மி கட்சி அல்ல. ஆம் ஆத்மியின் தவறான நடவடிக்கைளில் நான் ஈடுபட விரும்பவில்லை.

எனவே, கட்சியில் இருந்து விலகி மக்களுடன் நெருக்கமாகச் செல்ல இருக்கிறேன்.

பாஜகவில் இணைந்த எம்பிக்கள்

ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேரில் நான், ஹர்பஜன் உள்பட 7 பேர் பாஜவில் இணைய இருக்கிறோம். இது தொடர்பாக மாநிலங்களவை தலைவருக்கு நாங்கள் கடிதம் எழுதி அனுப்பி விட்டோம்.’ என்றார்.

அதன்படி ராகவ் சத்தா, சந்தீப் பதக் மற்றும் அசோக் மிட்டல் ஆகியோர் உடனடியாக டெல்லி பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்று அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபினை நேரில் சந்தித்து அவர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

அங்கு ஒருவருக்கு ஒருவர் இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

ஆம் ஆத்மி எதிர்ப்பு

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை பதவி நீக்க ஆம்ஆத்மி கோரிக்கை விடுத்துள்ளது. 7 எம்பிக்கள் விலகலால், மாநிலங்களவையில் தனது பலத்தை இழக்கிறது ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சிக்கு தற்போது மாநிலங்களவையில் 10 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 7 பேர் பஞ்சாபிலிருந்தும், 3 பேர் டெல்லியிலிருந்தும் தேர்வாகியுள்ளனர்.

இந்தச் சூழலில் தான் மாநிலங்களவையின் அக்கட்சியைச் சேர்ந்த 7 எம்.பி.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.

ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள்

1. ராகவ் சத்தா

2. ஹர்பஜன் சிங்

3. சுவாதி மாலிவால்

4. ராஜேந்திர குப்தா

5. விக்ரம் சஹ்னி

6. அசோக் மிட்டல்

7. சந்தீப் பதக்

=====