ராகுல் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்
Rahul Gandhi Vote Theft Remarks on SIR : இந்தியாவில் SIR பணிகள் மற்றும் வாக்குத் திருட்டு என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். ஆதாரமற்ற அவரது குற்றச்சாட்டுகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக 16 முன்னாள் நீதிபதிகள், 123 ஓய்வு பெற்ற அதிகாரிகள், 14 முன்னாள் தூதர்கள் என மொத்தம் 272 பேர் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி, ராகுல், காங்கிரஸ், எதிர்க்கட்சிகளின் அரசியல் கபட நாடகத்தை உடைத்து எறிந்து இருக்கிறார்கள்.
அரசியல் அமைப்புகள் மீது தாக்குதல்
தோல்வி என்ற ஒன்றை சந்திக்கும் போதெல்லாம், காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களின் ஒருவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியும், அரசியமைப்பின் அமைப்புகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். இதன் காரணமாக ஜனநாயகமும், அரசியல அமைப்புகளும் தேவையற்ற தாக்குதலை சந்திக்க வேண்டி இருக்கிறது.
ஆதாரமின்றி களங்கப்படும் முயற்சி
ஒரு கட்டிடத்தின் வலிமையான தூண்களை சரிப்பது எப்படி ஆபத்தானதோ, அது போன்று ஜனநாயக வேர்களை சிதைக்க ராகுல் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். பாதுகாப்பு படைகள், நீதித்துறையை களங்கப்படுத்தி இருக்கும் அவர், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். இதற்கு அவருக்கு துணையாக நிற்கும் எதிர்க்கட்சிகளும் வரிந்து கட்டி, மக்களை குழப்புகின்றன.
கடிதம் மூலம் ராகுலுக்கு பதிலடி
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு' மற்றும் தேர்தல் மோசடிகள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியவர்கள் ஆராய்ந்தனர். "100 சதவீத ஆதாரம்" இருப்பதாக பலமுறை கடுமையான குற்றச்சாட்டுகளையும் கூற்றுக்களையும் முன்வைத்த இவர், இன்று வரை ஒரு பிரமாணப் பத்திரத்தை கூட தாக்கல் செய்யவில்லை என்பதை கடிதம் எழுதியவர்கள் அம்பலப்படுத்தினர். பிரமாணப் பத்திரம் சட்டப்பூர்வமான ஒன்று. அப்படி இருக்கையில் ராகுல் தாக்கல் செய்ய மறுப்பது அவர் மீது அவநம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.
அரசியல் ஆதாயம் தேட முயற்சி
இதற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம், குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை தருமாறும் கேட்டது. ஆனால், ராகுல் அதை ஏற்கவே இல்லை. 272 பேர் எழுதிய கடிதம், காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை அடிப்படையிலேயே தகர்த்து எறிகிறது.
வாக்காளர் பட்டியல் திருத்த செயல்முறையான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) ஐ குறிவைத்து, தேர்தல் ஆணையத்தை "BJPயின் B-குழு" என்று இவர்கள் அழைப்பதில் இருந்தே பின்னணி அரசியல் அப்பட்டமாக தெரிகிறது.
SIR - வெளிப்படையான அணுகுமுறை
தேர்தல் ஆணையம் SIR முறையைப் பகிரங்கமாகவே செயல்படுத்தி வருகிறது. இதில் ஒளிவு மறைவு இல்லை. நீதிமன்ற அனுமதியுடன் உரிய மேற்பார்வையுடன் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. தகுதியற்ற வாக்காளர்கள் நீக்கப்படுகிறார்கள். தகுதியான வாக்காளர்கள் சேர்க்கப்படுகிறார்கள். அவர்கள் ஜனநாயக வாக்குரிமையை 100 சதவீதம் செலுத்த தேர்தல் ஆணையம் வழி வகுத்து இருக்கிறது.
தோல்வியை மறைக்க ராகுல் முயற்சி
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் என்பது, அரசியல் விரக்தி மற்றும் தோல்வியை மறைக்கும் முயற்சி தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.
வெளிப்படையான, சரிபார்க்கப்பட்ட அல்லது சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள் எதையும் ராகுல் இதுவரை காட்டவில்லை. வெறும் கோஷங்கள் மட்டும் எங்கும் ஆதாரமாக இருக்கவே முடியாது.
முடிவு சாதகமாக இருந்தால் மவுனம்
தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக இருக்கும் போது, தேர்தல் ஆணையத்தின் மீதான விமர்சனங்களை மறந்து விடுவது, அதே சமயம் ஆளும் கட்சி வெற்றி பெறும் போது, வாக்கு திருட்டு என்ற கோஷத்தை முன்னெடுப்பது இதுதான் காங்கிரசின் தேர்தல் வியாபார உத்தி.
சந்தர்ப்பவாதம் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு ஒரு எச்சரிக்கை, காங்கிரஸ் அல்லது எதிர்க்கட்சியுடன் இணைந்த கட்சிகள் தேர்தல்களில் தோல்வியடையும் போது, தேர்தல் ஆணையம் வில்லத்தனமாக செயல்படுவதை போன்று சித்தரிக்கப்படுகிறது.
தொடர் தோல்வியால் காங்கிரஸ் விரக்தி
கடிதம் எழுதிய முக்கிய பிரமுகர்களின் கோபம், சந்தர்ப்பவாத அரசியலை தோலுறித்தது. மக்களுடன் இணைவதற்கான, நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான உறுதியான திட்டம் இல்லாமல், தொடர்ச்சியான தேர்தல் தோல்வி மற்றும் விரக்தியால் ஏற்பட்ட கோபத்தை காங்கிரஸ் வெளிப்படுத்தி வருவதை இது காட்டுகிறது.
முக்கிய பிரமுகர்கள் அறிவுரை
அரசியலமைப்பு நிறுவனங்கள், நீதித்துறை, ஆயுதப்படைகள், சிவில் சர்வீசஸ் மற்றும் தேர்தல் ஆணையம் போன்றவை, ஆளும் கட்சியின் அடிமைகள் போன்று சித்தரிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே, அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளை காங்கிரஸ், தனது நாடக விமர்சனங்களுக்கு பயன்படுத்தக் கூடாது. அரசியலமைப்பு
வழிகள் மூலம் குறைகளை எடுத்துக் கூறலாம். அதேபோன்று, குற்றச்சாட்டுகள் இருந்தால், நம்பகமான, சட்டப்பூர்வமாக பொறுப்பான ஆதாரங்களை சமர்ப்பித்து மக்களின் நம்பிக்கையை பெற முயற்சிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியவர்கள் அறிவுரை கூறி இருக்கிறார்கள்.
===============