இந்தியாவின் தலைமை நீதிமன்றமான உச்ச நீதிமன்றம் பல்வேறு வழிகளில் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது. அப்படி இருந்தும் அங்கு மட்டும் இதுவரை இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் இருந்து வந்தது. தற்போது அந்த நிலையை தலைமை நீதிபதி கவாய் மாற்றிக்காட்டி உள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு :
அதன்படி உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக இடஒதுக்கீடு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி பணிபுரியும் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினரின் நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு தொடர்பாக இடஒதுக்கீடு செயல்பாட்டுக்கு கெண்டு வரப்பட்டுள்ளது.
பணி வாரியாக பதிவாளர்கள், மூத்த தனி உதவியாளர்கள், உதவி நூலகர்கள், ஜூனியர் நீதிமன்ற உதவியாளர்கள், சேம்பர் உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு இடஒதுக்கீடு அமலாக உள்ளது. இதற்கான கொள்கை வரையறைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிகளில் பட்டியலின ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 15 சதவீதமும், பழங்குடியின பிரிவினருக்கு 7.5 சதவீத பணியிங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணி போல இட ஒதுக்கீடு :
மத்திய அரசின் நேரடி ஆட்சேர்ப்பு இடஒதுக்கீட்டு விதிமுறைகளை போல் இந்த இடஒதுக்கீடு சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற பணியாளர்களுக்கு இப்படியான இடஒதுக்கீடு வழங்குவது வரலாற்றில் இதுதான் முதல் முறையாகும்.
இந்த நடைமுறை 2025 ஜூன் மாதம் 23-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த மாதம் 24ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் அனைத்து பணியாளர்கள் மற்றும் பதிவாளர்களுக்கும் சுற்றிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது உச்ச நீதித்துறையின் உள் நிர்வாகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.
உச்ச நீதிமன்றத்தை எடுத்து கொண்டால் நீதிபதிகள் உள்பட யாருக்கும் இடஒதுக்கீடு என்பது கிடையாது. இதனால் பொதுவாக நீதித்துறையில் பின்தங்கிய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு உரிய அந்தஸ்து கிடைப்பது இல்லை என்ற கருத்து நீண்டகாலமாக நிலவி வரும் நிலையில் தற்போது இந்த இடஒதுக்கீடு முறை என்பது அந்த விமர்சனத்தை உடைத்து இருக்கிறது. வருங்காலங்களில் இது முழுமையாக அமலுக்கு வரும் போது, இட ஒதுக்கீட்டை முழுமையாக பின்பற்றும் அமைப்பாக உச்ச நீதிமன்றமும் திகழும்.
----