கடும் போட்டியில் கட்சிகள்
SIR Voters List 2026 Registration in Tamil Nadu : வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழக அரசியலில் கட்சிகளுக்குள் கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியும் மக்கள் முன் தங்களை பல்வேறு வழிகளில் முன்னிறுத்தி வருகின்றனர். கூடுதலாக கூட்டணி அமைத்து, தங்களின் கட்சியை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்காக, மற்ற கட்சிகளுடன் கைகோர்த்து பலப்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்
இதற்கிடையில் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. நவம்பர் 4-ந் தேதி இந்த பணி தொடங்கப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் 19 -ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனால் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587-ஆக இருந்த தமிழக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756-ஆக குறைந்தது.
பெயர் சேர்ப்பதற்கு கூடுதல் அவகாசம்
இதன்பின்னர், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பெயரை சேர்க்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மேலும் 18 வயது பூர்த்தி செய்தவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியல் பெயர்களை சேர்க்கவும் கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி முதல் இந்த மாதம் 18-ந்தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு படிவங்கள் பெறப்படவில்லை. அதனால் ஜனவரி 30-ந்தேதி வரை பெயர் சேர்க்க அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.