உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், தான் செப். 29, 2025 அன்று காவல்துறையால் காவலில் வைக்கப்பட்டதாகவும், ஆனால், செப். 30 தான் முறையாக கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கி இருக்கிறது.
24 மணி நேரத்தில் ஆஜர்படுத்துவது அவசியம்
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் அதுல் எஸ் சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒருவர் கைது செய்யப்பட்டதிலிருந்து 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் அல்லது விடுவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
அடிப்படை பாதுகாப்புக்கு முன்னுரிமை
”கைதுக்கும் தடுப்புக் காவலுக்கும் இடையில் ஒரு செயற்கையான வேறுபாட்டை உருவாக்கும் எந்தவொரு முயற்சியும் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படைப் பாதுகாப்பை நீர்த்துப்போகச் செய்யும் செயல்.
கைது செய்யப்படும் நொடியே காலக்கெடு
ஒருவர் செய்ததாகச் சந்தேகப்பட்டு, கைது செய்யும் அதிகாரியால் அவர் தடுத்து வைக்கப்படும் நொடியிலிருந்து 24 மணிநேரக் காலக்கெடு தொடங்குகிறது.
அந்த நொடியே அவரது சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது. அதன்படி, சட்டப்பிரிவு 22-இன் உட்பிரிவு (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ள 'கைது மற்றும் தடுப்புக் காவல்’ ஆகிய சொற்கள் ஒத்த பொருளுடையவை” என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.
தீர்ப்பின் முக்கியம் அம்சங்கள்
24 மணி நேரக் காலக்கெடு என்பது முறையான கைது நடவடிக்கையிலிருந்து அல்ல, தடுப்புக்காவலிலிருந்தே தொடங்குகிறது
ஒரு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படாமல் 24 மணி நேரத்திற்கு மேல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டால், உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்
நீதிபதி, நீதிமன்றத்திற்குச் செல்வதற்கான அவசியமான பயண நேரம் மட்டுமே விலக்களிக்கப்படலாம்.
தடுப்புக்காவலுக்கும் கைதுக்கும் இடையில் எந்தவொரு செயற்கையான வேறுபாடும் அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்கப்படாது
24 மணி நேரத்திற்குள் இருந்தாலும் கூட, தடுப்புக்காவல் பிரிவு 58 பிஎன்எஸ்எஸ்-இன் கீழ் அதற்கான காரணம் நியாயமானதாக இருக்க வேண்டும்
நீதிபதிகள் தடுப்புக்காவலின் தேதி மற்றும் நேரத்தைப் பதிவுசெய்து, பிரிவு 22(2)-க்கு இணங்குவதை சரிபார்க்க வேண்டும்
தடுப்புக்காவல் 24 மணி நேரத்திற்குள் இருந்தாலும் கூட, அது நியாயமான காலத்தை மீறும் பட்சத்தில், நீதிபதிகள் நீதிமன்றக் காவலை மறுக்கலாம்.
====================