Supreme Court Review Caste Certificate Mother Identity Guidelines India
தாயின் முழுப் பராமரிப்பில் வளரும் குழந்தைகளுக்குத் தாயின் சாதி அடிப்படையில் சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை வகுப்பதற்கு உள்ள சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்குப் புதிய நம்பிக்கை
தற்போதைய நடைமுறைப்படி தந்தையின் சாதியை அடிப்படையாகக் கொண்டே குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு வரும் நிலையில், குறிப்பிட்ட சில இக்கட்டான சூழ்நிலைகளில் தாயின் சாதி அடையாளத்தை வைத்து சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க முடியுமா என ஆராயுமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
விவாகரத்து பெற்றவர்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பவர்கள் மற்றும் தனித் தாயாக (Single Mother) குழந்தையைப் பராமரிப்பவர்கள் எனத் தாயே குழந்தையின் முழுப் பாதுகாவலராக இருக்கும் நேர்வுகளில், தந்தையின் விவரங்களைக் கட்டாயப்படுத்தாமல் தாயின் சாதியின் அடிப்படையில் சான்றிதழ் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்வைத்த முக்கியக் கருத்துகள்
நேற்று (27-11-2026) நடைபெற்ற மனுக்கள் மீதான விசாரணையின்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களைப் பரிசீலித்து மத்திய அரசுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியது.
அட்டர்னி ஜெனரலிடம் வினவப்பட்ட முக்கியக் கேள்வி
சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு மற்றும் இடம்பெயர்வு தொடர்பாக ஏற்கனவே அரசியல் சாசன அமர்வு வழங்கியுள்ள தீர்ப்புகளின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எவ்வித பாதகமும் ஏற்படாத வகையில், குழந்தையின் சாதியைத் தந்தையின் சாதியைக் கொண்டே தீர்மானிக்கும் வழக்கமான நடைமுறையில் விதிவிலக்கு அளிக்க வாய்ப்புள்ளதா என்பதை ஆராயுமாறு, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) ஆர். வெங்கடரமணியிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து விசாரணை
ஒரே சாதியைச் சேர்ந்த தம்பதியரின் வழக்குகள் மற்றும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதியரின் வழக்குகள் என இவற்றைத் தனித்தனியாகப் பிரித்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.
இவை அனைத்தும் ஒரே கோணத்தில் ஒருங்கிணைத்தே விசாரிக்கப்படும் எனத் தெளிவுபடுத்திய அமர்வு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தது.
============