The Election Commission's New Facilities to Get Real-time Updates on Five-State Election Results!
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்களின் முடிவுகளை பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
முடிவுகள் வெளியாகும் நேரம்
இந்த ஐந்து மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் திங்கட்கிழமை (2026, மே 4) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலிருந்தும் உடனுக்குடன் தகவல்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் முடிவுகளை எப்படிப் பார்க்கலாம்?
தேர்தல் நிலவரங்களை நொடிக்கு நொடி துல்லியமாகத் தெரிந்துகொள்ள பின்வரும் வழிகளைப் பயன்படுத்தலாம் என்றும் தேர்தல் ஆணையம் சில இணையதள முகவரியையும் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்:
ஒவ்வொன்றாகத் தொகுதிகளின் சுற்று வாரியான முடிவுகளை https://results.eci.gov.in/ என்ற பிரத்யேக இணையதள முகவரியில் காணலாம்.
தேர்தல் முடிவுகளை மொபைல் செயலி மூலம் அறிந்துகொள்ள
பொதுமக்களின் வசதிக்காக Voter Helpline (வாக்காளர் உதவி) என்ற செயலி மற்றும் ECINET வாயிலாகவும் முடிவுகள் உடனுக்குடன் பதிவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வத் தகவல்கள்
வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள தேர்தல் பொறுப்பு அதிகாரிகள் வழங்கும் அதிகாரப்பூர்வத் தகவல்கள் மட்டுமே இணையதளத்திலும் மொபைல் செயலியிலும் வெளியாகும் என்பதால், இதன் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதன் மூலம் பொதுமக்கள் எந்தவிதத் தாமதமுமின்றித் தேர்தல் முடிவுகளைத் தங்கள் கைபேசியிலேயே உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
=====