புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கன் 9 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது..
இந்த விண்வெளி பயணத்தில் இந்தியாவின் சுபான்ஷூ சுக்லா ,அமெரிக்கா,போலந்து மற்றும் ஹங்கேரி வீரர்கள் இடம்பெற்ற நிலையில், 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளி சென்ற இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷூ சுக்லா படைத்துள்ளார்.
ரஷ்யாவின் சோயுஷ் திட்டத்தின் கீழ் 1984ஆம் ஆண்டு இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா என்பவர் விண்வெளிக்கு பயணம் செய்தார்.
ராகேஷ் சர்மாவிற்குப் பிறகு யாரும் இந்தியா சார்பில் யாரும் விண்வெளிக்கு பயணிக்கவில்லை.
தற்போது 41 ஆண்டுகளுக்குப் பிறகு சுபான்ஷூ சுக்லா தான் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
யார் இந்த சுபான்ஷூ சுக்லா:
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் பிறந்தவர் சுபான்ஷூ சுக்லா.
இவர் 2006 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையின் ஃபைட்டர் பிரிவில் பறக்கும் விமானியாக சேர்ந்தார்.
தொடர்ந்து, An-32,டார்னியர், ஹாக், ஜாக்குவார், மிக் -21 மற்றும் சுகோய் போர் விமானங்களில் 2,000 மணி நேரத்திற்கும் மேலாக அவர் பறந்துள்ளார்.
ரஷ்யாவில் விண்வெளி தொடர்பான பயிற்சிகளையும் மேற்கொண்டார்.
பிப்ரவரி 27, 2024 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணத்திற்கான விண்வெளி வீரர் குழு உறுப்பினர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
அதில் சுபான்ஷூ சுக்லாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டதிற்காக இந்தியா பல்வேறு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சுபான்ஷூ சுக்லாவின் விண்வெளி பயணத்தின் அனுபவங்களும் இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
ராகேஷ் சர்மா விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் என்றாலும், சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணித்து, அங்கு ஆய்வுகளை மேற்கொள்ளும் வாய்ப்பு சுபான்ஷூ சுக்லாவுக்கு கிடைத்து இருக்கிறது.
====