சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவை அனுப்பி சாதனை படைத்த இந்தியா, அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை செலுத்துவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. அண்மையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவி சாதனை படைத்தது.
செயற்கைக்கோள்கள் அதிகரிக்கப்படும் :
இந்தநிலையில், உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், புவி வட்டப் பாதையில் இந்தியாவின் 55 செயற்கைக்கோள்கள் சுற்றி வருவதாகவும், இந்த எண்ணிக்கை நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார்.
அடுத்த தலைமுறை ராக்கெட் :
இஸ்ரோ அடுத்த தலைமுறைக்கான ராக்கெட்டை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. அந்த ராக்கெட்டின் திறன் எப்படி இருக்கும் தெரியுமா? முதல் முதலாக டாக்டர் அப்துல் கலாம் ராக்கெட்டை கட்டமைத்தபோது அதன் எடை 17 டன். அந்த ராக்கெட் மூலம் புவி வட்டப்பாதையில் 35 கிலோ எடை அளவுக்கான செயற்கைக்கோளை நிலைநிறுத்த முடிந்தது.
40 மாடி உயரம் கொண்ட ராக்கெட் :
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் எல்லாமே கூடிவிட்டது. 75,000 கிலோ எடை கொண்ட பொருளை கூட சுமந்து சென்று புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தும் அளவுக்கு நாம் வளர்ந்து விட்டோம். இதற்காக, 40 மாடி உயரம் கொண்ட பிரமாண்ட ராக்கெட் உருவாக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க செயற்கைக்கோள்களை செலுத்துவோம் :
இந்திய ராக்கெட்டுகள் மூலம், 6,500 கிலோ எடை கொண்ட அமெரிக்காவின் தொலைதொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுதல், 'நேவிக்' எனப்படும் வழிகாட்டுதல் சேவைக்கான இந்திய செயற்கைக்கோள் அமைப்பு மற்றும் 'என்1' ராக்கெட் உள்ளிட்ட திட்டங்கள் இந்த ஆண்டு நிறைவேற்றப்படவுள்ளன. 2035ம் ஆண்டுக்குள் 52 டன் எடை கொண்ட பிரமாண்ட விண்வெளி நிலையத்தை அமைக்கும் திட்டமும் இஸ்ரோ வசம் இருக்கிறது.
சூரியனை ஆய்வு செய்யும் ‘எல்1’
ஒற்றை ராக்கெட்டில் முதல் முயற்சியிலேயே, 104 செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவிய முதல் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ தான். அதே போல் முதல் நாடும் இந்தியா தான். இதன் மூலம் நாம் வரலாறு படைத்திருக்கிறோம். சூரியனை பற்றி ஆய்வு மேற் கொள்ள இன்று நாம் 'எல்1' செயற்கைக் கோளையும் கட்டமைத்திருக்கிறோம்.
அடுத்தடுத்த பாய்ச்சலுக்கு இந்தியா எப்போதும் தயாராகவே இருக்கிறது” இவ்வாறு இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
================