மழைக்கால கூட்டத் தொடர் :
Parliament Monsoon Session 2025 : நாடாளுமன்றத்தை பொருத்தவரை பட்ஜெட் கூட்டம், மழைக்கால கூட்டம், குளிர்கால கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில் மழைக்கால கூட்டத் தொடர் துவங்கி இருக்கிறது. புதிய மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசும், பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகளும் தயாராக உள்ளன.
புதிய வருமான வரி மசோதா :
1961ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வருமான வரி சட்டத்துக்கு மாற்றாக, புதிய வருமான வரி மசோதா பல திருத்தங்களுடன் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்ட குழு அரசுக்கு 285 யோசனைகளை முன்வைத்தது. இந்தக் குழுவின் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள் :
ஆபரேஷன் சிந்தூர், இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு தானே காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருவது, உள்ளிட்ட பிரச்சினைகள் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதேசமயம் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது பற்றி அனைத்து கட்சிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ஆக்கப்பூர்வமான விவாதம் :
அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ”எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆபரேஷன் சிந்துார் உட்பட முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படும். அதே நேரம் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
அலகாபாத் உயர்நீதி மன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பண மூட்டை சிக்கிய விவகாரத்தில், அவரை பதவி நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் இந்தக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
=====